Published : 10 Aug 2022 05:40 PM
Last Updated : 10 Aug 2022 05:40 PM

தலிபான் ஆட்சியின் ஓர் ஆண்டு: துயரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு ஆன நிலையில், அந்நாட்டில் நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், தலிபான்களின் ஆட்சி அவ்வாறாக நடைபெறவில்லை. அங்கு தற்போது வறுமையும், பசியும், நோயும் மட்டுமே மிஞ்சியுள்ளது.

காலரா ஒரு சாட்சி: கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் திடீரென வாந்தி பேதியுடன் மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைகளை நாடினர். மக்களுக்கு ஏற்பட்டிருந்த தொற்று காலராவை ஒத்திருந்தாலும் கூட அதை உறுதி செய்ய அவர்களுக்கு எவ்வித மருத்துவ பரிசோதனை ஆய்வுக்கூட வசதியும் போதிய அளவில் இல்லை.

பொது மருத்துவமனை தலைவர் மருத்துவர் இஷானுல்லா ரோடி கூறுகையில், “நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. நான் ஒருநாளைக்கு ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்கினேன். நோயாளிகள் அதிகம், மருத்துவர்கள் குறைவு, மருந்துகளும் குறைவு” என்றார்.

ஆப்கானிஸ்தான் மிக மோசமான மனித உரிமைகளை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பட்டினியில் வாடும் குழந்தைகள்: அடிப்படை மருத்துவ வசதிக்குக் கூட அல்லல்படும் சூழல் ஒருபுறம் இருக்க, ஆப்கன் குழந்தைகள் பட்டினியில் வாடுகின்றனர். குறிப்பாக நாட்டின் தென் பகுதியில் பசியும் பட்டினியும் மிகுந்துள்ளது.

இது குறித்து ஆப்கனின் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள லஷ்கர் கா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் எங்களால் சமையல் எண்ணெய் கூட பெற முடியவில்லை. இந்த மருத்துவமனையில் எனது பேரன் சேர்க்கப்படுவது இது ஐந்தாவது முறை. ஊட்டச்சத்து குறைப்பாட்டால் சேர்க்கப்பட்டுள்ளார். ரொட்டி கிடைப்பது கூட கடினமாகிவிட்டது” என்றார்.

மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் கூறுகையில், “இங்கே அன்றாடம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் வருகின்றனர். பட்டினியால் இன்னும் நிறைய குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். இன்னும் பலரால் இங்கு வரமுடியாத நிலைகூட இருக்கலாம். எத்தனை குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் கூட இல்லை” என்றார்.

தகுதியற்ற பொறுப்பில் தலிபான்கள்: ஆப்கானிஸ்தானில் இருந்து அவசர கதியில் அமெரிக்க, நேட்டோ படைகள் கிளம்பின. இதனால், அங்கு ஆட்சியை எளிதில் கைப்பற்றினர் தலிபான்கள். ஆனால் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று பெயரை மட்டுமே அவர்களால் மாற்ற முடிந்ததே தவிர ஆட்சி மாற்றத்தினால் ஆக்கபூர்வமாக நாட்டிற்கு எதுவும் செய்ய முடியவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் லஷ்கர் கா பகுதியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர், “அரசாங்கத்தின் அங்கி தலிபான்களின் தகுதிக்கு மிகப்பெரியது. பொருந்தாத ஒன்றை அவர்கள் கையில் எடுத்துள்ளார்கள்” என்றார்.

செயல்படும் அரசு எங்கே? - ஆப்கனின் அவல நிலையைப் போக்க உலக நாடுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முன்வந்தாலும் கூட ஆட்சி கட்டமைப்பே சீராக இல்லாத இடத்தில் யார் வாயிலாக எப்படி உதவிகளைக் கொண்டு சேர்ப்பது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

அண்மையில், ஆப்கனில் ஏற்பட்ட கடுமையாக நிலநடுக்கத்தில் சிக்கி 1000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அப்போது அங்கு சர்வதேச அமைப்புகள் உதவிகளைச் செய்தன. அது ஒரு பேரிடர் நிகழ்வு, அதுவும் குறிப்பிட இடத்தில் நிகழ்ந்தது என்பதால் எளிதில் கையாள முடிந்தது. ஆனால், 3.8 கோடி மக்களுக்கும் உதவிகள் சென்றடைய வேண்டுமானால் செயல்படும் அரசு வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x