Published : 20 Oct 2016 05:46 PM
Last Updated : 20 Oct 2016 05:46 PM

ஹிலாரி - டிரம்ப் இறுதி விவாதம்: கவனம் ஈர்த்த 20 அம்சங்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டிய தொலைக்காட்சி இறுதி விவாத நிகழ்வில் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மூன்றாவது மற்றும் இறுதி விவாத நிகழ்வையொட்டிய கவனிக்கத்தக்க 20 அம்சங்கள்:

* தொலைக்காட்சி விவாதம் தொடங்குவதற்கு முன்பும் பின்பும் அதிபர் வேட்பாளர்களான ஹிலாரியும், டிரம்ப்பும் மரியாதை நிமித்தமாக கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

* சுமார் 90 நிமிடங்கள் நீடித்த விவாதத்தில் பல இடங்களில் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களே பெரிதும் இடம்பெற்றிருந்தன.

* டிரம்ப் விவாதத்தின்போது ஹிலாரியை 'ஓர் அசிங்கமான பெண்' என்று குறிப்பிட்டது பார்வையாளர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியது.

* 'ரஷ்ய அதிபர் புதினின் கைப்பாவை' என்று டிரம்ப்பை கடுமையாக சாடினார் ஹிலாரி. தனது தேர்தல் பிரச்சாரப் பேரணிகளில் வன்முறைகளைத் தூண்டிவிடுவதாக, ஹிலாரி மீது குற்றச்சாட்டை முன்வைத்தார் டிரம்ப்.

* ஊடகங்கள் அனைத்தும் ஹிலாரிக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்று தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் டிரம்ப் இறுதிச்சுற்று விவாதத்திலும் அதைக் குறிப்பிட்டார்.

* வேலை வாய்ப்புகள், வருவாய் உயர்வு, தேச பாதுகாப்பு நலன் என எந்த நலனும் தராத டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தை வலுவாக எதிர்ப்பதாக ஹிலாரி கூறினார்.

* டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தை ஹிலாரி முன்பு ஆதரித்து தற்போது எதிர்க்கிறார் என டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

* குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க வேலைவாய்ப்புகளை வெளிநாட்டுக்குத் தாரை வார்த்துவிட்டு தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என ஹிலாரி குற்றம்சாட்டினார்.

* சிரியாவில் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் போரை உருவாக்கி மக்களை அகதிகளாக்கியது மட்டும்தான் ஹிலாரியின் சாதனையாக இருக்கும். வேறு எதையும் ஹிலாரி செய்யவில்லை என டிரம்ப் கூறினார்.

* சிக்காகோவில் நடந்த இனவெறித் தாக்குதலை கண்டும் காணமல் இருந்தது ஜனநாயக் கட்சியின் ஆட்சிதான் என்று டிரம்ப் குற்றம்சாட்டினார்.

* விவாதத்தில் டிரம்ப் மீது பெண்கள் அளித்துள்ள பாலியல் புகார் குறித்து ஹிலாரி கேள்வி எழுப்பினார். ஹிலாரியின் இந்தக் குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

*ஹிலாரி ஒருவேளை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படடல், ''கிளிண்டன் கூடாரம் உங்கள் அனைவரையும் பொய்களால் துளைத்தெடுக்கப் போகிறது. அவருடைய ஒவ்வொரு தாக்குதலையும் ஊடகங்கள் ஆதரிக்கும். அவருடைய ஊழல்களை காண மறுத்து பார்வையற்றிருப்பது போல் செயல்படும். எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள்" என்று டிரம்ப் ஹிலாரியை தாக்கிப் பேசினார்.

வாக்குறுதிகள்

* அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு பழமைவாதப் பற்றுடைய நீதிபதிகளை நியமிக்கப்போவதாக வாக்குறுதியளித்த டிரம்ப், கருக்கலைப்பு செய்வதை சட்டபூர்வமாக்கிய தீர்ப்பை தாம் நியமிக்கும் நீதிபதிகள் தள்ளுபடி செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.

* துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையைப் பாதுகாப்பது, ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் குடியேறியவர்களை வெளியேற்றுதல், அமெரிக்க எல்லைகளைப் பாதுகாத்தல் முதலான தனது வாக்குறுதிகளை மீண்டும் பதிவு செய்தார் டிரம்ப்.

* தன்பாலுறவினர்கள், திருநங்கைகள் உரிமைகளைக் காத்தல், கருக்கலைப்பு உரிமையைப் பாதுகாத்தல், மத்திய வர்க்க மற்றும் பெண்கள் நலன் மேம்பாடு, பெண்களின் உரிமையைக் காத்தல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஹிலாரி வாக்குறுதி அளித்தார்.

* இறுதி விவாதத்தில் நடந்த வார்த்தைப் போரில் இந்த உலகுக்கு எதிராக நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். அமெரிக்காவை அமெரிக்கர்களே ஆள்வார்கள் என்பதை மீண்டும் இவ்வுலகுக்கு நிரூபித்திருக்கிறோம் என்று டிரம்ப் கூறினார்.

கருத்துக்கணிப்புகள்

* மூன்று சுற்றுகளிலுமே ஹிலாரியே மக்கள் மத்தியில் முன்னிலை பெற்றிருப்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது.

* இறுதி தொலைக்காட்சி விவாதத்துக்குப் பிறகு, சிஎன்என் செய்தி நிறுவனமும் ஓஆர்சி கருத்துக்கணிப்பு நிறுவனமும் மேற்கொண்ட கணிப்பின்படி ஹிலாரி கிளிண்டனுக்கு 52% ஆதரவும், டிரம்ப்புக்கு 39% ஆதரவும் கிடைத்துள்ளது.

* தொலைக்காட்சி நிறுவனங்களால் நடத்தப்பட்ட இந்தக் கருத்துகணிப்பு குறித்து கருத்து தெரிவிக்க டிரம்ப் மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x