Published : 09 Aug 2022 09:28 PM
Last Updated : 09 Aug 2022 09:28 PM

சீனா Vs தைவான் - மற்ற நாடுகள் விலகி நின்று வேடிக்கை பார்த்தால்..?

ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டு, வறுமையற்ற வளர்ச்சி நிலையை எட்டிப்பிடித்திருக்கும் நாடு தைவான். சீனாவுடன் தொடக்கத்திலிருந்தே தொடரும் முரண்பட்ட உறவு, எப்போது போர் மேகங்கள் சூழுமோ என்கிற அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகளின் பகையை எதிர்கொள்ளும் எந்தவொரு நாடும், இன்றைக்கு உக்ரைன் எதிர்கொண்டுள்ள நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது எழுதப்படாத விதியாகத் தொடர்கிறது. ஒருவேளை, தைவானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் சீனாவிடமிருந்து தாக்குதல்கள் நேரலாம் என்று அஞ்சியிருக்க வேண்டியதில்லை என்பதுதான் எதார்த்த நிலை.

உதாரணத்துக்கு, வடகொரியாவையே எடுத்துக்கொள்ளலாம். தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை உலகுக்குக் காட்டிக்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அந்நாடு புதிய ஏவுகணைகளைச் சோதித்துப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

ஆனால், சீனாவின் மறைமுக ஆதரவோடு வடகொரியாவின் கிம் ஜாங்-உன், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆட்சியைத்தான் நடத்திக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நாட்டுடன், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். காரணம் மிக எளிதானது. வடகொரியா தன்னிடம் இருப்பதாகக் கூறும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடுமோ என்ற ஆபத்து இருப்பது மட்டுமே.

எந்த நாடும் இஸ்ரேலுடன் பகைமை பாராட்டவில்லை. சவுதி அரேபியா தொடங்கி வளைகுடா நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுடன் சமரசத்துக்குத்தான் முயற்சிகளை முன்னெடுக்கின்றன. இதற்குக் காரணம், இஸ்ரேலிடம் உள்ள அணு ஆயுதத் தொழில்நுட்பம் குறித்த அச்சம்தான்.

உக்ரைன் சந்திக்கும் இந்தச் சூழ்நிலைக்கு தைவானைத் தள்ளிவிடாமல் இருக்க ஒரே வழி, அவர்களை ஆதரிக்க முன்வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள், யுத்தச் சூழல் ஏற்பட்டால், தங்களிடம் உள்ள அணு ஆயுதத் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வோம் என்று உறுதியளிப்பதுதான்.

அணு ஆயுத வல்லமை கொண்ட சீனா, ஜனநாயக நாடான தைவானைச் சர்வதேசச் சட்ட நெறிமுறைகளுக்கு மாறாகத் தன்னுடன் இணைத்துக்கொள்ளும் முயற்சியைச் சர்வதேசச் சமூகம் வேடிக்கை பார்க்கும் என்றால், அது வரலாற்றின் பக்கங்களில் நீங்காத கறையாகவே நிலைத்து நிற்கும். சீனா தன்னுடைய ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டால், அதைக் கண்டித்து அறிக்கைகள் விடுவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட சிறிய நாடுகளுக்கு அளிக்கப்படும் சர்வதேச ஆதரவு என்பது அணு ஆயுதத் தொழில்நுட்பப் பகிர்வாகவும் மாறக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு எழாவிட்டால் பொருளாதார, ராணுவ பலம் பொருந்திய நாடுகள் தங்களது அண்டை நாடுகளைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் தொடரவே செய்யும்.

ஜனநாயக நாடான தைவானைப் பாதுகாப்பது சர்வதேசச் சமூகத்தின் கடமை. தற்போதுள்ள கால அவகாசத்தை உலக நாடுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

காலம் கடந்து பின்பு எடுக்கும் முடிவுகளால் பயனில்லை. ஒருவேளை, இது பிராந்தியப் பிரச்சினை என்று மற்ற நாடுகள் விலகி நின்று வேடிக்கை பார்த்தால், அது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியின்மைக்கே வழிவகுக்கும்.

> இது, ‘மாடர்ன் டிப்ளமஸி’ இதழின் ஆசிரியர் சி.ஆன்றணி விஜிலியஸ் எழுதிய, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x