

தைபே: எல்லையோரத்தில் ராணுவ பயிற்சியை நீட்டித்த சீனாவை தைவான் கடுமையாக விமர்சித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் தொடர்ச்சியாக தைவானுக்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையை பெற்ற நான்சி மிகப் பெரிய மோதல் போக்கு ஏற்படவும் காரணமாகி இருக்கிறார். காரணம், நான்சியின் இப்பயணத்துக்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது. சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும் சீனா தெரிவித்தது.
அத்துடன் நான்சியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இந்த பயிற்சி ஞாயிற்றுக்கிழமை முடியும் என சீனா அறிவித்திருந்தது. சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என தைவான் ராணுவம் பதிலடு அளித்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தாண்டியும், தைவான் எல்லையோரத்தில் சீனா தனது போர் பயிற்சிகளை தொடர்ந்து வருகிறது. இதனை தைவான் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து தைவானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “சீனாவின் நடவடிக்கைகள் ஆத்திரமூட்டுக்கின்றன. தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்ற நிலையை ஏற்படுத்துகின்றன. தைவானின் எல்லையில் ராணுவ பயிற்சியை நீட்டித்த சீனாவை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.