

புதுடெல்லி: ரக்ஷா பந்தனை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அவரது பாகிஸ்தானிய சகோதரி கமர் மொஷின் ஷேக் ராக்கி கயிறு மற்றும் வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளார். அதில் 2024-ம் ஆண்டு தேர்தலிலும், மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த கமர் மொஷின் ஷேக், திருமணத்துக்குப்பின், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கிறார். ரக்ஷா பந்தனை முன்னிட்டு, இவர் டெல்லியில்மோடியை சந்தித்து ராக்கி கட்டுவது வழக்கம். கடந்தாண்டு கரோனா பரவல் காரணமாக இவர் தபாலில் ராக்கிகயிற்றை அனுப்பினார். இந்தாண்டும் அவர் எம்பிராய்டரி வேலைபாடுகளுடன் தானே தயாரித்த ராக்கி கயிறு மற்றும் வாழ்த்து அட்டையை பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் மூலம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து கமர் மொஷின் ஷேக் அளித்த பேட்டியில் கூறியதாவது. இந்த முறை நான் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளேன். அவர் என்னை டெல்லி அழைப்பார் என நம்புகிறேன். ரேஷ்மி ரிப்பனில் எம்பிராய்டரி வேலைபாடுகளுடன் ராக்கியை நானே செய்துள்ளேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும். 2024-ம் ஆண்டு தேர்தலிலும், அவர் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராவார்.