Published : 06 Aug 2022 09:43 PM
Last Updated : 06 Aug 2022 09:43 PM
இந்தியாவைச் சேர்ந்த மன்தீப் கவுர் என்ற பெண், அமெரிக்காவில் குடும்ப வன்முறை காரணமாக தற்கொலை செய்து கொண்டது அங்கு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளுக்கு எதிர்ப்புக் குரல்களை உரக்க ஒலிக்கச் செய்துள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்த மன்தீப் கவுருக்கும், ரான்ஜோத்பூர் சிங்க்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடந்ததுள்ளது. திருமணம் முடிந்தவுடன் கணவருடன் மன்தீப் கவுர் அமெரிக்கா செல்கிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பெண்குழந்தைகள் பெற்றதற்காக கடந்த எட்டு வருடங்களாக கணவர் ரான்ஜோத்பூரால் மன்தீப் வன்முறைக்கு ஆளாகி உள்ளார்.
இது தொடர்பாக தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன்தீப் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், கணவன் மற்றும் கணவன் வீட்டாரது கொடுமை தாங்காது மன்தீப் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்னர் மன்தீப் கவுர் வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ பதிவே மன் தீப்புக்கு பல வருடங்களாக அவரது கணவரால் நடந்த வன்முறையை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
மன் தீப் வெளியிட்ட வீடியோவில், “நான் பல வருடங்களாக பொறுத்துக் கொண்டேன். இந்த திருமணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அவர் தனது நடவடிக்கையை ஒருநாள் சரிசெய்து கொள்வார் என்று நம்பினேன். ஆனால் 8 வருடங்கள் கடந்துவிட்டன. என்னால் இனியும் தினமும் அடிவாங்க இயலாது. அவர்கள் என்னை தற்கொலைக்கு வற்புறுத்துகிறார்கள். அப்பா... நான் இறக்க போகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கண்ணீருடன் மன்தீப் பேசியிருக்கிறார்.
There are collosal problems in our family & social structure which we conveniently ignore or deny to accept. #DomesticViolence against women is one such serious problem. Suicide by Mandeep Kaur a NRI Punjabi woman is a wake up call to accept the problem and fix it accordingly. pic.twitter.com/F8WpkiLCZY
— Gurshamshir Singh (@gurshamshir) August 5, 2022
மன்தீப் தந்தை தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் இந்த வன்முறை ஒருநாள் முடிவடையும் என்று நம்பினோம். அவர்களது பிரச்சினையில் ஒருமுறை தலையிட்டு நியூயார்க்கில் உள்ள காவல் நிலையத்தில் புகாரும் அளித்தோம். மன்தீப்பை அவளது கணவர் அடிக்கு வீடியோ காட்சிகளையும் போலீஸாரிடம் காண்பித்தோம். ஆனால், எனது மகளின் கணவர் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து வழக்கை வாபஸ் வாங்க என் மகள் கூறினாள். இதன் காரணமாக நாங்களும் வழக்கை வாபஸ் வாங்கினோம். என் மகள் அவளது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையில் இருந்தாள்” என்றனர்.
இந்திய அரசு தங்களது மகளின் உடலை இந்தியா கொண்டு வர உதவ வேண்டும் என்றும் மன்தீப்பின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் மன்தீப்புக்கு நியாயம் வேண்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றன. அமெரிக்காவில் வாழும் பாஞ்சாபியர்களும் மன்தீப்பிற்காக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மன்தீப்பின் மரணத்துக்கு காரணமான ரான்ஜோத்பூர் சிங் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
|தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT