Published : 06 Aug 2022 06:22 AM
Last Updated : 06 Aug 2022 06:22 AM

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி மீது சீனா தடை

பெய்ஜிங்: தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2-ம் தேதி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். நான்சியின் தைவான் பயணத்தால் சீனா கடும் கோபத்துக்கு உள்ளானது. இந்நிலையில் நான்சி பெலோசி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சீனா பொருளாதரத் தடை விதித்துள்ளது.

தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும் நான்சி பெலோசியின் பயணம் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அவமதிக்கிறது என்றும் சீன வெளியுறவுத் துறை தெரிவித்தது

பெலோசியின் வருகையை அடுத்து தைவானின் 6 எல்லைப் பகுதிகளையும் சீனாவின் முப்படைகளும் சுற்றி வளைத்தன. தைவானின் எல்லைப் பகுதியில் சீனா போர் ஒத்திகையை தொடங்கியது. இந்நிலையில் தைவானின் எல்லையைச் சுற்றி சீனாவின் 100 போர் விமானங்கள் மற்றும் 10 போர்க் கப்பல்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன என்று சீனா நேற்று தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை அன்று தைவானின் சுற்றுப் பகுதியில் அதிநவீன ஏவுகணைகளை ஏவி சீனா போர் ஒத்திகை நடத்தியது. பாலிஸ்டிக் ஹைபர்சோனிக் வகைகளைச் சேர்ந்த 11 ஏவுகணைகள் அடுத்தடுத்து ஏவப்பட்டன். 7-ம் தேதி வரை போர் ஒத்திகை நடத்துவோம் என்று சீன ராணுவம் அறிவித்தது. இதனால், இரு நாடுகளை போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. தைவானின் பாதுகாப்புக்காக அமெரிக்க போர்க் கப்பலுகளும் தைவானின் கடற்பரப்பில் வலம் வந்தபடி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x