

கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறினார். பிறகு பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூலை 20-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடந்த ஜனவரி முதல் இதுவரை இலங்கைக்கு 400 கோடி டாலர் நிதியுதவியை இந்தியா வழங்கியுள்ளது. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று பேசும்போது, “இலங்கையின் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும் நமது முயற்சியில் இந்தியா அளித்துள்ள உதவி குறித்து தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, நமக்கு உயிர்மூச்சு அளித்துள்ளது. எனது சார்பிலும் நமது மக்கள் சார்பிலும் பிரதமர் மோடிக்கும் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.
வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இலங்கை பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக ரணில் கூறினார். இதுகுறித்து அவர் கூறும்போது, “திரிகோண மலையில் உள்ள எண்ணெய் கிடங்கு வளாகத்தை இந்தியாவுடன் சேர்ந்து நாம் மேம்படுத்த முயன்றபோது, அந்த வளாகம் இந்தியாவுக்கு விற்கப்பட உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அத்திட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது அத்திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் மக்கள் தற்போது எரிபொருளுக்கு வரிசையில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது” என்றார்.