Published : 04 Aug 2022 04:20 AM
Last Updated : 04 Aug 2022 04:20 AM
தைபே: சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவான் வந்து சென்றார். இதையடுத்து சீனா - அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவானைச் சுற்றி அமெரிக்க, சீன போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளதால் தென் சீன கடல் பகுதியில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென் சீன கடல் பகுதியில் தனி தீவாக உள்ளது தைவான். இதை தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியாக சீனா கூறிவருகிறது. இதனால், தைவானுடன் வேறு எந்த நாடும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக் கொண்டால் அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவானை தனி நாடாக செயல்பட விடவேண்டும் என அமெரிக்கா கூறிவருகிறது.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கடந்த வாரம் போனில் நீண்ட நேரம் பேசினர். அப்போது தைவான் மீதான அமெரிக்க கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தைவானின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மாற்றும் முயற்சிகளில் சீனா ஈடுபட வேண்டாம் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த சீன அதிபர், “நெருப்புடன் விளையாட வேண்டாம். நெருப்புடன் விளையாடுபவர்கள் அதனால் அழிக்கப்படுவர். தைவானின் சுதந்திரத்தையும், அதில் வெளிநாடுகளின் தலையீட்டையும் சீனா வன்மையாக எதிர்க்கிறது” என தெரிவித்தார்.
இந்தச் சூழலில், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஒருநாள் பயணமாக நேற்று முன்தினம் தைவான் வந்தார். அமெரிக்க விமானப் படை விமானத்தில் தனது நாட்டு குழுவினருடன் அவர் வந்தார். இதுகுறித்து நான்சி பெலோசி கூறும்போது, “தைவானுடன் கொண்டுள்ள நட்புறவை பெருமையாக கருதுகிறோம். தைவானுக்கு அளித்த உறுதியை கைவிட மாட்டோம் என்பதை தெளிவுபடுத்துவதற்காக எங்கள் குழு இங்கு வந்துள்ளது” என்றார்.
“நான்சி பெலோசி குழுவினரின் வருகையை வரவேற்கிறோம். இந்த பயணம் தைவானுக்கு அமெரிக்காவின் உறுதியான ஆதரவு உள்ளதை காட்டுகிறது. இரு நாடுகள் இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுவடையும்” என தைவான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியது.
அமெரிக்க அதிபருக்கு அடுத்த நிலையில் உயர் பதவியில் உள்ள அந்நாட்டு சபாநாயகர், தைவான் வந்தது, கடந்த 25 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. தைவானில் திபெத் பிரதிநிதிகளையும் நான்சி பெலோசி சந்தித்துப் பேசினார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேற்று மாலை அமெரிக்கா திரும்பினார்.
நான்சி பெலோசியின் இந்த பயணம் சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானுக்கு தனி நாடு என்ற அங்கீகாரத்தை அமெரிக்கா வழங்கியுள்ளதாக சீனா கருதுகிறது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறும்போது, “அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணம் கேலிக்கூத்தானது. ஜனநாயகம் என்ற போர்வையில் சீனாவின் இறையாண்மையை அமெரிக்கா மீறிவிட்டது. சீனாவை அவமதிப்பவர்கள் தண்டிக்கப்படுவர்” என்றார்.
நான்சி பெலோசியின் தைவான் பயணத்தையொட்டி, தைவான் கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் கடந்த 2 நாட்களாக சுற்றி வருகின்றன. அதேநேரத்தில் சீன போர்க்கப்பல்களும் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளன.
இதுபற்றி சீன ராணுவம் கூறும்போது, “நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். நான்சி பெலோசியின் பயணத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்குவோம். இது சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கும் அவசியமான நடவடிக்கை” என தெரிவித்துள்ளது.
அதற்கேற்ப தைவானைச் சுற்றி 5 நாள் போர் பயிற்சியில் ஈடுபடப் போவதாக சீனா அறிவித்து, போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளது. தைவான் வான் எல்லைக்குள் சீனாவின் 27 போர் விமானங்கள் நேற்று முன்தினம் அத்துமீறி பறந்தன.
சீனாவின் இந்த நடவடிக்கை, முக்கிய துறைமுகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவான் கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு சீனாவின் போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் சென்றுள்ளது இரு நாடுகள் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார தடை
தைவானில் இருந்து பழங்கள், மீன் இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது. மேலும், தைவான் தீவுப் பகுதிக்கு சீனாவில் இருந்து மணல் கொண்டு செல்லப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. 23 மில்லியன் மக்களுடன் ஜனநாயக ஆட்சி நடைபெறும் தைவானை ஒருநாள் கைப்பற்றுவோம் என சீனா தொடர்ந்து கூறிவருகிறது.
உக்ரைனில் ரஷ்யா ஊடுருவியதுபோல், தைவானில் சீனா எந்நேரமும் ஊடுருவி கைப்பற்றலாம் என தெரிகிறது. அதிபர் ஜி ஜின்பிங் ஆட்சிக் காலத்தில், சீன ஊடுருவல் அபாயம் அதிகரித்துள்ளதாக தைவான் மக்களும் உணர்கின்றனர். தைவானைச் சுற்றி சீனா போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு அண்டை நாடான ஜப்பானும் கவலை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT