Published : 03 Aug 2022 05:00 AM
Last Updated : 03 Aug 2022 05:00 AM

‘‘அமெரிக்கா தகுந்த விலையை தர வேண்டியிருக்கும்’’ - நான்சி பெலோசி தைவான் பயணத்துக்கு சீனா எச்சரிக்கை

தைபே: சீனாவின் எச்சரிக்கையை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று தைவான் சென்றார்.

சீன உள்நாட்டுப் போரின்போது பிரிந்து சென்ற தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரும், ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதிநிதியுமான நான்சி பெலோசி தைவானுக்கு செல்ல திட்டமிட்டார். இதற்கு சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. சில நாட்களுக்கு முன்பு சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தொலைபேசியில் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார்.

சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறும்போது, ‘‘தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால், அதற்கான விலையை அந்த நாடு தர வேண்டியிருக்கும்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் தைவானுக்கு அருகே பிங்டன் தீவில் பிரம்மாண்ட போர் ஒத்திகையை சீன ராணுவம் நடத்தியது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பயணம் செய்யும் விமானத்தை சுட்டு வீழ்த்துவோம் என்று சீன ராணுவ வட்டாரங்கள் மிரட்டல் விடுத்தன. தைவான் வளைகுடா பகுதியில் நீரிலும் நிலத்திலும் செல்லும் அதிநவீன டாங்கிகளையும் சீன ராணுவம் நிறுத்தி வைத்திருந்தது.

சீனாவின் மிரட்டல், எச்சரிக்கையை மீறி நான்சி பெலோசி நேற்று தைவான் தலைநகர் தைபே சென்றடைந்தார். அமெரிக்க விமானப் படையின் 5 போர் விமானங்கள் நான்சியின் விமானத்துக்கு பாதுகாப்பாக சென்றன. தைவான் கடல் பகுதியில் 4 அமெரிக்க போர்க் கப்பல்களும் முகாமிட்டிருந்தன.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவானை ஆக்கிரமிக்க சீன ராணுவம் முயற்சி மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக சீனா, அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x