

போலி கால்சென்டர்கள் நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட 20 பேர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர்கள்.
கைது செய்யப்பட்டவர்களின் கால்சென்டர் தலைமையகம் அகமதாபாத்தில் அமைந்துள்ளது.
கால்சென்டர்கள் பெயரும், அதில் பணிபுரிந்தவர்கள் பெயரும் உடனடியாக தெரியப்படுத்தப்படவில்லை.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட செய்தியில், "போலி கால்சென்டர்கள் நடத்தியவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இயங்கி வந்த ஹரி ஓம் ஐடி பார்க், யூனிவர்சல் அவுட்சோர்சிங் சர்வீசஸ் மற்றும் ஒஸ்வால் ஹவுஸ் என்ற மூன்று போலி கால் சென்டர்களை அண்மையில் போலீஸார் கண்டுபிடித்தனர்.
இந்த கால்சென்டர் நிறுவனங்கள் அமெரிக்காவில் வசிக்கும் பெரும் பணக்காரர்களை குறிவைத்து பலகோடி பண மோசடியில் ஈடுபட்டு வந்தன.
அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல அமெரிக்க பணக்காரர்களிடம் தொலைபேசி மூலம் பேசி நாளொன்றுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை ஏமாற்றி இந்நிறுவனங்கள் பணம் பறித்துள்ளன. கடந்த ஓராண்டாக நடந்த இந்த மோசடி மூலம் ரூ.500 கோடி வரை அமெரிக்க பணக்காரர்களிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக போலி கால்சென்டர் நிறுவனங்களில் பணியாற்றி வந்த 20 ஊழியர்களை போலீஸார் கைது செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.