

எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் வெளியுறவு விவகார ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறினார்.
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சர்தாஜ் அஜீஸ் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் நேற்று இஸ்லாமாபத்தில் கூறும்போது, “இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் நசீர் ஜன்ஜுவா ஆகிய இருவரும் தொலைபேசியில் பேசினர். அப்போது கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் பதற் றத்தைத் தணிக்கவும், காஷ்மீர் விவகாரத்தில் முழு கவனம் செலுத்தவும் பாகிஸ்தான் விரும்பு கிறது. பதற்றத்தை அதிகரிப்பதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்ப இந்தியா முயற்சிக்கிறது” என்றார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது கடந்த வாரம் துல்லிய தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் பலரைக் கொன்றதாக ராணுவம் தெரிவித்தது.
காஷ்மீரில் உரி ராணுவ முகாம் மீதான தீவிரவாத தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் இந்தத் துல்லியத் தாக்குதலை நடத்தியது.
ஆனால் “இந்தியா தரப்பில் துல்லியத் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் அத்துமீறிய தாக்குதல் மட்டுமே நடத்தப்பட்டது” என பாகிஸ்தான் கூறுகிறது.
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சமீபத்திய அமெரிக்கப் பயணம் குறித்து அஜீஸ் கூறும்போது, “எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்து உலகத் தலைவர்களிடம் நவாஸ் ஷெரீப் பேசியுள்ளார். காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிடில் இரு நாடுகள் இடையே பதற்றம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்” என்றார்.
நவாஸ் ஆலோசனை
இதனிடையே இந்திய ராணுவ தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் இஸ்லாமாபாதில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காஷ்மீர் விவகாரம் குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று ஒருமித்த குரலில் முடிவு செய்யப்பட்டது.