

அமெரிக்காவின் தொலைக்காட்சி பிரபலமும், மாடலுமான கிம் கர்தாஷியனின் நகைகளை முகமூடி அணிந்த நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக சி.என்.என் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "பாரீஸில் நடைபெற்ற ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிம் கர்தாஷியன் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் நுழைந்த முகமூடி அணிந்த 5 நபர்கள் கர்தாஷியனை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரிடமிருந்த பல லட்ச மதிப்புடைய நகைகளை திருடிச் சென்றுள்ளனர்" எனக் கூறியுள்ளது.
துப்பாக்கி முனையில் மிரட்டியவர்களில் இருவர் போலீஸ் ஆடையை அணிந்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிம் கர்தாஷியன் அமெரிக்காவின் பிரபல ராப் இசைக் கலைஞரான கென்யா வெஸ்ட்டின் மனைவி ஆவார்.
கென்யா வெஸ்ட் | படம்: ஏபி
கிம் கார்தாஷியன் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட செய்தி அறிந்த கென்யா வெஸ்ட் தனது இசை நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்திருக்கிறார்.
இசை நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறியதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் வெஸ்ட்.
கிம் கர்தாஷியன் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு அவருடைய நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.