

பாகிஸ்தானில் போலீஸ் பயிற்சி கல்லூரியில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு நடத்திய துணிகர தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 118 பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரின் சர்யாப் சாலையில் போலீஸ் பயிற்சி கல்லூரி உள்ளது. போலீஸ் பணிக்குத் தேர்வு செய்யப் பட்டவர்கள் மற்றும் போலீஸார் என சுமார் 700 பேர் இக்கல்லூரி விடுதியில் நேற்று முன்தினம் இரவு தங்கியிருந்தனர். இந்நிலையில் இரவு 11 மணியளவில் உடலில் வெடிகுண்டு பொருத்திய 3 தீவிரவாதிகள் இக்கல்லூரி வளாகத்தில் ஊடுருவி சிலரைப் பிணைக் கைதிகளாக பிடித்தனர். மேலும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து இவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வெகுநேரம் நீடித்த மோதலுக்குப் பிறகு, பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட 2 தீவிரவாதிகள் தங்கள் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். மற்றொரு தீவிரவாதி மோதலில் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 60 பேர் உயிரிழந் தனர். மேலும் 118 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனை வரும் குவெட்டா நகரில் உள்ள பொது மருத்துவமனை மற்றும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர் களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய தீவிர வாதிகள் ‘பாகிஸ்தான் தலிபான்’ இயக்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட லஷ்கர்-இ-ஜாங்வி அமைப்பின் அல்-அலிமி பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து உத்தரவுகளைப் பெற்று தாக்குதல் நடத்தியதாக எல்லைக் காவல் படை ஐ.ஜி. ஷெர் ஆப்கன் கூறினார்.
இந்தக் கல்லூரி இதற்கு முன் 2 முறை தாக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ல் இக்கல்லூரி வளாகத்தில் 5 குண்டுகள் வெடித்தன. இதில் 6 போலீஸார் உயிரிழந்தனர். 2008-ல் கல்லூரி மைதானம் மற்றும் கட்டிடத்தின் மீது ராக்கெட் குண்டுகளை தீவிரவாதிகள் வீசினர்.
தீவிரவாதம் மற்றும் இனச் சண்டையால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள பலுசிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் தேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
பலுசிஸ்தானின் ஜிவானி நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலோர காவல்படை வீரர்கள் இருவர் மற்றும் பொதுமக்களில் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த, பலுசிஸ்தான் விடுதலைப் படை தீவிரவாதி சுட்டுக்கொன்றார். இந்நிலையில் மறுநாள் இத்தாக்குதல் நடந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் குவெட்டா நகர பொது மருத்துவ மனையில் நடந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 73 பேர் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்கள் ஆவர். தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் ஒரு பிரிவும் ஐ.எஸ். அமைப்பும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றன.