

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் நான்கு பேர் காயம் அடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது ஷ்பகீசா டி20 கிரிக்கெட் லீக் எனும் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இது உள்ளூர் அணிகளுக்கு இடையிலான டி20 தொடராகும். இந்த தொடரின் ஒரு பகுதியாக இன்று (வெள்ளிக்கிழமை) பேண்ட்-இ-அமிர் டிராகன்ஸ் மற்றும் பாமிர் சால்மி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின் போதுதான் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி இது தற்கொலைப் படை தாக்குதல் என சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில் போட்டியை காண வந்திருந்த பார்வையாளர்களில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இதனை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி நஸீப் கான் அறிக்கையின் மூலம் உறுதி செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குண்டு வெடித்ததும் போட்டியை காண வந்திருந்த பார்வையாளர்கள் பெரும்பாலானவர்கள் பதட்டம் அடைந்து பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் காபூலில் மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருந்தது.