

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப் பதற்காக இரு நாடுகளுடனும் தொடர்புகொண்டு பேசி வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் ஷுவாங் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீரின் உரி பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி யதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் பக்கத்து நட்பு நாடுகள் என்ற அடிப்படையில், இரு நாடுகளுடனும் பல்வேறு நிலைகளில் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். குறிப்பாக, பிரச்சினைக்கு சுமூகமான முறையில் பேசி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் தங்களுக்கிடையிலான உறவை மேம்படுத்திக் கொள்வதுடன், பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணும் என்று நம்புகிறோம். இந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் பதற்றத்தைத் தணிக்கவும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றும் நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.