ஆப்கன் அரசு ஊழியர்களை விமர்சிப்போருக்கு தண்டனை: தலிபான் அரசின் புதிய உத்தரவு

ஆப்கன் அரசு ஊழியர்களை விமர்சிப்போருக்கு தண்டனை: தலிபான் அரசின் புதிய உத்தரவு
Updated on
1 min read

காபூல்: தலிபானின் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரக அரசின் அறிஞர்கள் மற்றும் அரசு ஊழியர்களை விமர்சிப்பவர்களை தண்டிக்கப்படுவார்கள் என தலிபான் அரசு தனது புதிய உத்தரவில் தெரிவித்துள்ளது. இதனை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியைக் கைப்பற்றியது தலிபான். அப்போது முதலே அந்த நாட்டில் மனித உரிமை அத்துமீறல்கள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, பெண் கல்வி மற்றும் மகளிர் உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளதும் கவனிக்கத்தக்கது.

தலிபான் அரசை சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களை கைது செய்து, சிறையில் அடைத்து, சித்ரவதை செய்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அரசின் அறிஞர்கள் மற்றும் சேவகர்களை விமர்சிக்கும் நாட்டு மக்கள் தண்டிக்கப்படுவார்கள் என தலிபான் தெரிவித்துள்ளது.

மக்கள் விமர்சிப்பது அரசுக்கு எதிரான பிரச்சாரம் என்பது மட்டுமின்றி இது எதிரிகளுக்கு உதவும் எனவும் தலிபான் அரசு கூறியுள்ளது.

மேலும், இந்தப் புதிய உத்தரவில் ராணுவ பணியில் உள்ள வீரர்களைத் தொடுவது அல்லது அவர்களது உடைகளை விலக்குவது மற்றும் அவர்களிடத்தில் தவறாக பேசுவதும் தண்டனைக்குரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த நாட்டில் நேஷனல் ரெசிஸ்டன்ஸ் ஃபிராண்டை சேர்ந்தவர்கள் தலிபான் அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இதோடு தொடர்புடைய தனி நபர்கள் தலிபான் அரசு தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக ஐ.நா கடந்த வாரம் கூறியிருந்தது. அதேபோல அரசுக்கு எதிராக பேசும் அமைப்புகளை சார்ந்த தலைவர்களின் தலையை துண்டிப்பது (ஃபத்வா) தொடர்பாகவும் தலிபான் சட்ட அறிஞர் பேசியதாக சொல்லப்பட்டுள்ளது.

உலகத்தின் முன் யாருமே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என தெரிவித்துள்ளார் காபூல் பல்கலைக்கழக பேராசிரியரான பைத்துல்லாஹ் ஹமீதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in