Published : 23 Jul 2022 04:41 AM
Last Updated : 23 Jul 2022 04:41 AM

இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்பு - புதிய அமைச்சரவையில் 17 பேருக்கு வாய்ப்பு

இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் அலுவலகத்துக்கு வெளியே முகாமிட்டிருந்த போராட்டக்காரர்களை ராணுவத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்புறப்படுத்தினர். அப்போது, ஆவேசமாக எதிர்ப்புத் தெரிவித்த போராட்டக்காரர். படம்: பிடிஐ

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன நேற்று பதவியேற்றார். அவருடன் 17 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். முன்னதாக, அதிபர் அலுவலகம் முன்பு திரண்ட போராட்டக்காரர்களை ராணுவத்தினர் நள்ளிரவில் அப்புறப்படுத்தினர்.

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் பதவியேற்றார். இந்நிலையில், புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன(73), அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று பொறுப்பேற்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த இவர், வெளியுறவு, கல்வி, உள்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சவின் வலதுகரமாக தினேஷ் குணவர்த்தன பார்க்கப்படுகிறார்.

மேலும், பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுடன், 17 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். இவர்களில் 13 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்கள். ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியை சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா கடல்தொழில் வளங்கள் அமைச்சராகப் பதவியேற்றார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவிஏற்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நசீர் அகமது சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

ராணுவத்தினர் தாக்குதல்

இதற்கிடையில், அதிபர் அலுவலகம் முன் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த முகாம்களை, ராணுவத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு அகற்றினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். மேலும், பத்திரிகையாளர்கள் மீதும் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் சுமார் 50 பேர்காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு போர்ட் ரயில்வே நிலையத்தில் நேற்று காலை மீண்டும் போராட்டம் நடைபெற்றது.

தூதர்கள் கண்டனம்

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூல் ஜங், “ராணுவம் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். அதேபோல, பிரிட்டன் தூதர் சாரா ஹல்டன், “அமைதியாகப் போராடும் உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார். பேராட்டக்காரர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இலங்கையில் உள்ள ஐ.நா ஒருங்கிணைப்பாளர் ஹானா சிங்கர்- ஹேம்டிம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x