Published : 22 Jul 2022 07:42 AM
Last Updated : 22 Jul 2022 07:42 AM
ஜெருசலேம்: இஸ்ரேலில் புழக்கத்துக்கு வந்துள்ள கோஷெர் போன் குறித்து தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகள் பழமைவாத மத தலைவர்களை கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதன் எதிரொலியாக ஸ்மார்ட்போன் விற்பனையக கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் உள்ள யூதர்கள் மிகவும் மத ரீதியில் தீவிர பற்று கொண்டவர்கள். இவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகத்தை அறவே வெறுக்கின்றனர். இந்நிலையில் ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக கோஷெர் என்ற போன் (சாதாரண செல்போன்) அறிமுகம் செய்யப்பட்டது.
இதில் ஒருவருக்கொருவர் பேச மட்டுமே முடியும். முந்தைய தொலைபேசி போன்றது. இதில் குறுஞ்செய்தி அனுப்புவதோ அல்லது வீடியோ காட்சிகள் மற்றும் வானொலி, இணையதள இணைப்பு ஏதும் கிடையாது.
இந்தப் போனின் பயன்பாடு குறித்து ‘‘கோஷெர் போனை உபயோகிப்பதற்கு பைபிள் போன்ற நூலைப் படித்து அறிந்துகொண்டிருப்பதைப் போன்று எவ்வித அறிவும் தேவையில்லை” என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இது மத பழமைவாதிகள் (ஹரிடி யூதர்கள்) மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பழமைவாத தலைவர்களின் ஆதரவாளர்கள் இஸ்ரேலின் பல பகுதியில் ஸ்மார்ட்போன் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
ஜெருசலேம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் உள்ள ஸ்மார்ட்போன் மற்றும் மின்னணு சாதன விற்பனையகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பழமைவாத பிரிவினர் வசிக்கும் பகுதிகளிலும் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.
மதம் சார்ந்த படிப்பு மட்டும்தான்: இஸ்ரேலில் மொத்தமுள்ள 16 சதவீத யூதர்களில் ஹரிடி எனப்படும் பழமைவாத பிரிவினர் 12.6 சதவீதம். இப்பிரிவினரின் வாரிசுகள் மதம் சார்ந்த படிப்புகளை மட்டுமே படிக்கின்றனர். இவர்கள் அறிவியல், தகவல் தொழில்நுட்ப படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில்லை.
இஸ்ரேலில் தொலைத் தொடர்பு சேவைஅளிக்கும் பிரதான நிறுவனங்கள் கோஷெர் செல்போன்களுக்கான சேவையை அளிக்கின்றனர். ஏறக்குறைய 5 லட்சம் கோஷெர்போன்கள் உபயோகப்படுத்தப்படுவதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT