ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தும் மார்பர்க் வைரஸ்: அறிகுறிகள், பாதிப்புகள் என்னென்ன?

ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தும் மார்பர்க் வைரஸ்: அறிகுறிகள், பாதிப்புகள் என்னென்ன?

Published on

கரோனா வைரஸிடமிருந்து உலக நாடுகள் முழுமையாக மீளாமல் போராடி வரும் சூழலில், கடந்த சில மாதங்களாக குரங்கு அம்மை வைரஸ் பரவத் தொடங்கியது. இந்தச் சூழலில் தற்போது புதிய வைரஸ் பரவல் குறித்த எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதுதான் மார்பர்க் வைரஸ் (Marburg Virus). ஆப்பிரிக்க நாடான கானாவில் இரண்டு நபர்களுக்கு (ஒருவருக்கு வயது 26, மற்றவருக்கு வயது 51) மார்பர்க் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களுடன் தொடர்பில் இருந்து 90-க்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மார்பர்க் வைரஸ் என்றால் என்ன? - கொடிய வைரஸ் என்று அறியப்படும் எபோலா வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் இந்த மார்பர்க் வைரஸ். எபோலா பாதித்தால் காய்ச்சல், வாந்தி, ரத்தப்போக்கு, வயிற்றோட்டம் ஏற்படும். ஆகவே, மார்பர்க் பண்புகளும் எபோலாவை வைரஸ் ஒத்துள்ளது. எபோலாவை போல் இதுவும் உயிரிழப்பை ஏற்படுத்தும் வைரஸ்தான்.

எப்படி பரவுகிறது? - மார்பர்க் வைரஸ் பழந்தின்னி வெளவால்களிடமிருந்து விலங்குகளுக்கும், பின்னர் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது. மார்பர்க் தாக்கப்பட்டு ஒருவர் இறந்துவிட்டால் இறந்த அவர் உடல் மூலமும் இவை பரவும்.

அறிகுறிகள்: மார்பர்க் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் அறிகுறிகள் 3 வாரங்கள் வரை நீடிக்கும். நோய் பாதிப்பின் அறிகுறிகள் இரண்டாம் நாளிலிருந்து தெரிய ஆரம்பிக்கும். காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வயிற்றுபோக்கு, வாந்தி உணர்வு, வயிற்றில் வலி ஏற்படும். மூக்கு மற்றும் பிறப்புறுப்புகளில் ரத்தம் வருதல் ஆகியவை இந்த வைரஸின் தீவிர அறிகுறிகளாகும்.

பரிசோதனை & சிகிச்சை: RT-PCR சோதனைகள் மூலம் இந்த நோயை கண்டறியலாம். இந்த மார்பர்க் வைரஸுக்கு தடுப்பூசி இல்லை.

பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிர் காக்கப்படலாம். இதில் முக்கியமான தகவல், மார்பர்க் வைரஸிலிருந்து மீண்டவர்கள் மூலமும் மார்பார்க் வைரஸ் பரவும் என்பதால் சுமார் ஒரு வருடத்திற்கு மார்பர்க் வைரஸ் பாதித்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in