Published : 16 Jul 2022 02:21 PM
Last Updated : 16 Jul 2022 02:21 PM

'பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு சவுதி இளவரசர்தான் பொறுப்பு' - பைடன் பகிரங்க குற்றச்சாட்டு

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி இளவரசர்தான் பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவுதிக்கு அரசு ரீதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது சவுதியின் ஜெட்டா நகரில் சவுதி இளவரசர் சல்மான், ஜோ பைடனின் சந்திப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து ஜோ பைடன் பத்திரிகையாளர் சந்திப்பில் பக்கேற்றார்.

அப்போது ஜமால் கஷோகி மரணம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து பைடன் அளித்த பதிலில், “ நான் இந்த விவகாரத்தை நேரடியாக விவாதம் செய்தேன். அதைப் பற்றி தெளிவாக்கிக் கொண்டேன். நான் அதை நேரடியாகவே கூறுகிறேன். கஷோகியின் மரணத்திற்கு இளவரசர் சல்மான் காரணம் இல்லை என்று கூறுகிறார். உண்மையில் அவர்தான் கஷோகி கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். கஷோகிக்கு நடந்தது மூர்க்கத்தனமானது. கஷோகி மரணத்திற்கு சவுதி இளவரசர் சல்மான் தான் காரணம்.

அமெரிக்க புலானாய்வு துறை செய்த விசாரணையில் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் சல்மான் தான் உத்தரவிட்டார் என்பதை கண்டறிந்துள்ளது. இதனை கூறுவதால் தான் வருத்தப்படவில்லை.” என்றார்.

இந்தச் சந்திப்பில் கச்சா எண்ணெய் குறித்து விவாதித்தாக ஜோ பைடன் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜோ- பைடன் - இளவரசர் சல்மான் இடையே நடந்த இந்த சந்திப்பை ஜமால் கஷோகியின் காதலியான ஹடிஸ் சென்ஜி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஹடிஸ் சென்ஜி , ட்விட்டரில் கஷோகியின் பெயரில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில், “என் கொலைக்கு நீங்கள் உறுதியளித்த பொறுப்பு இதுதானா? சவுதி அரசு குடும்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் உங்கள் கைகளில் உள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் பைடனின் கேள்வி எழுப்பியதற்கு, ”அவர் அவ்வாறு நினைத்தற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

யார் இந்த ஜமால்?

ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980 களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

துருக்கியைச் சேர்ந்த ஹடிஸ் சென்ஜிஸ் ஜமாலை திருமணம் செய்யவிருந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமதுபின் சல்மான் இருப்பதாகவும் கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்த அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே அமெரிக்கா தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரை கவுரவப்படுத்தும் வகையில் கஷோகி சட்டம் என்றொரு சட்டத்தை அமெரிக்கா அமல்படுத்தியது. அதன்படி, பத்திரிகையாளர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவோரை அமெரிக்காவில் நுழையத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x