

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 3 நாள் பயணமாக நியூசிலாந்து நாட்டுக்கு நேற்று சென்றார்.
பப்புவா நியூ கினியா நாட்டில் 3 நாட்கள் தங்கியிருந்த அவர் நேற்று அதிகாலை நியூசிலாந்தின் ஆக்லாந்து தீவுக்கு சென்றார். அங்கு அந்த நாட்டு மயோரி இன மக்கள் தங்களின் பாரம்பரிய முறைப்படி அவருக்கு வரவேற்பு அளித்தனர். பிரணாபின் மூக்கோடு மூக்கை உரசி அவரை வரவேற்றனர்.
இந்தப் பயணத்தின்போது நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ உள்ளிட்ட தலைவர்களை பிரணாப் சந்தித்துப் பேசுகிறார். அப்போது இருநாட்டு ராணுவ உறவை வலுப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இது தவிர வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று நியூசிலாந்து வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூர் நாளிதழுக்கு பிரணாப் அளித்துள்ள பேட்டியில், இந்திய வெளிநாட்டு வர்த்தகம் இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் வழி யாகவே நடைபெறுகிறது. அந்த வகையில் எனது நியூசிலாந்து பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றார்.