Last Updated : 27 May, 2016 06:44 PM

 

Published : 27 May 2016 06:44 PM
Last Updated : 27 May 2016 06:44 PM

பெர்னியுடன் விவாதம் செய்ய ரூ.67 கோடி கேட்ட ட்ரம்ப்

ஜனநாயக கட்சி எம்.பி. பெர்னி சாண்டர்ஸுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தனக்கு 1 கோடி டாலர் (சுமார் ரூ.67 கோடி) தரப்பட வேண்டும் என்று குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் ஒரு மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான போதிய ஆதரவை டொனால்ட் ட்ரம்ப் பெற்று விட்டார்.

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கு, ஹிலாரி கிளிண்டன், பெர்னி சாண்டர்ஸ் இடையிலான போட்டியில் பெர்னி மிகவும் பின்தங்கியுள்ளார்.

இந்நிலையில் ஜிம்மி கிம்மல் டாக் ஷோவில் பங்கேற்ற பெர்னி சாண்டர்ஸ், டொனால்ட் ட்ரம்ப் உடன் விவாதம் செய்யத் தயாராக இருப்பதாக கூறினார்.

இதுகுறித்து டொனால்ட் ட்ரம்ப் கூறும்போது, “பெர்னி சாண்டர்ஸ் உடன் நேருக்கு நேர் விவாதம் செய்யத் தயாராக இருக்கிறேன். இதன் மூலம் டி.வி. நிகழ்ச்சியின் ரேட்டிங் அதிகரிக்கும். இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு 1 கோடி முதல் ஒன்றரை கோடி டாலர் வரை தரவேண்டும். பெண்களின் சுகாதாரம் தொடர்பான தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவே இத்தொகையை கேட்கிறேன்” என்றார்.

இதனிடையே ட்ரம்ப் கோரிக்கையை பெர்னி ஏற்றுக்கொண்டுள்ளார். கலிபோர்னியா மாநிலத்தில் ஜூன் 7-ம் தேதி உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விவாதம் அங்கு நடைபெற வேண்டும் என பெர்னி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x