

பாரிசில் இருந்து கெய்ரோ நோக்கி 66 பயணிகளுடன் சென்ற எகிப்து விமானம் மத்திய தரைக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 66 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோ நோக்கி எகிப்து ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. இதில் பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், குவைத், சவூதி, சூடான், போர்ச்சுகல், அல்ஜீரியா கனடா ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த 26 பயணிகளும், 10 சிப்பந்திகள், 30 எகிப்தியர்கள் உட்பட 66 பேர் இருந்தனர்.
விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபடி, எகிப்து நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்தபோது திடீரென ரேடார் கண்களில் இருந்து மறைந்தது. இதனால் பதட்டம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள், விமானத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், எகிப்தின் துறைமுக நகரமான அலெக்ஸாண்டிரியா அருகே மத்திய தரைக்கடலில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் 66 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்தில் சிக்கிய விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விமானம் விபத்துக்குள்ளானதை எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் உறுதிசெய்துள்ளார். தொழில்நுட்ப கோளாறா? அல்லது தீவிரவாத செயலா? என்பது குறித்து விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என கெய்ரோ விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.