

ஆப்கானிஸ்தானில் வாக்காளர்களின் விரல்களை துண்டித்த தலிபான் தீவிரவாதிகள் இருவரை போலீஸார் சுட்டுக்கொன்றனர். ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலுக்கான 2-வது சுற்று வாக்குப் பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. தலிபான்களின் எச்சரிக்கையையும் மீறி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
வாக்களித்தவர்களின் விரல்களை தலிபான்கள் வெட்டினர். இந்நிலையில் ஹெராத் நகரில் போலீஸாரின் அதிரடி நடவடிக்கையில், தலிபான் இயக்கத்தின் உள்ளூர் கமாண்டர் முல்லா ஷிர் அகா உள்பட இருவர் திங்கள்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் 11 வாக்காளர்களின், அடையாள மை வைக்கப்பட்ட விரல்களை துண்டித்தவர்கள் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையில் காயமடைந்த மற்றொரு தீவிரவாதி கைது செய்யப்பட்டார். எனினும் 2 தீவிரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, வாக்காளர்களின் விரல் துண்டிக்கப்பட்டது மிகவும் அருவருக்கத்தக்க செயல் என்று ஐ.நா. பணிகளுக்கான தலைவர் ஜான் குபிஸ் கூறியுள்ளார்.
“எளிய ஆப்கன் மக்கள் தங்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக தங்கள் அடிப்படை உரிமையை பயன்படுத்தியுள்ளனர். வன்முறை யிலோ அல்லது சூழ்ச்சியிலோ அவர்கள் ஈடுபடவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.