அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவார் என நினைக்கவில்லை - ஜெயசூர்யா

சனத் ஜெயசூர்யா.
சனத் ஜெயசூர்யா.
Updated on
1 min read

கொழும்பு: நெருக்கடியான இந்த சூழலில் அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவார் என ஒருபோதும் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா. அந்த நாட்டில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் அதிபர் ராஜபக்ச.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். ஆனால் அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறினர் அதிபர் கோத்தபய மற்றும் அவரது குடும்பத்தினர். இந்நிலையில், அவர் இப்போது மாலத்தீவிற்கு தப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பான இடத்தில் அவர் தங்கி உள்ளதாகவும் தகவல்.

இந்நிலையில், அதிபர் இப்படி நாட்டை விட்டு வெளியேறி செல்வார் என தான் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார் ஜெயசூர்யா. அவரும் மக்களுடன் அரசுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டிலேயே இருப்பார் என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் இப்படி செய்வார் என நினைக்கவில்லை. நிச்சயம் இது நடந்திருக்க கூடாத ஒன்று.

எரிபொருள், மின்சாரம், எரிவாயு, மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு என இத்தனை மாதங்களாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு தேவையான எதுவும் இல்லை. அதனால் தான் வீதிகளில் இறங்கி போராடினர். அது கூட பெரும்பாலான இடங்களில் அமைதியாக தான் நடந்தது.

இந்த நெருக்கடி சூழலில் எங்களுக்கு உதவ முன் வந்தது இந்தியா மட்டும் தான். ஆனால் அது மட்டும் எங்களுக்கு போதுமானதாக இல்லை. பிற நாடுகளும் எங்களுக்கு உதவ வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் விலக வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கை. இலங்கைக்கு உதவும் வகையில் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைவார்கள் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in