Published : 13 Jul 2022 08:34 AM
Last Updated : 13 Jul 2022 08:34 AM

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பியோட்டம்

கொழும்பு: இலங்கையில் மக்கள் போராட்டம் வலுவடைந்த சூழலில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி, மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார்.

அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவியுடன் இலங்கையில் இருந்து புறப்பட்டார். அவருடன் பாதுகாவலர்கள் இருவரும் உடன் சென்றுள்ளனர்.

மாலத்தீவுக்குச் சென்றடைந்த அவர், ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்தது என்ன? - இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச்மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

ஆனால், அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய, ராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்பட்டது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தனது பதவியை இன்று (ஜூலை 13) அதிபர் கோத்தபய ராஜிநாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாபா அபேவர்தனா தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கூட்டணி அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன. நாட்டின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 20-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

கோத்தபய ராஜபக்ச இன்று பதவி விலகிய பிறகு, நாடாளுமன்றத் தலைவர் அபேவர்தனா இடைக்கால அதிபராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், போராட்டக்காரர்கள் தனது மாளிகைக்குள் நுழையும் முன்பே அதிபர் கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து வெளியேறி, இலங்கை கடற்படைத் தளத்தில் உள்ள ரகசிய அறையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது.

இதனிடையே நேற்று முன்தினம் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் தம்பி பசில் ராஜபக்ச இலங்கையில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு தப்பி செல்ல முயன்றார். இவர் மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் தப்பி செல்ல திட்டமிட்டு, கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். முகக்கவசம் அணிந்திருந்த நிலையிலும் விமான நிலைய அதிகாரிகளும், அங்கிருந்த போராட்டக்காரர்களும் பசில் ராஜபக்ச தப்பி செல்வதை கண்டுபிடித்து அவரைத் தடுத்து நிறுத்தினர். அவரைத் தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் பசில் ராஜபக்சவை விமான நிலையத்திலேயே சிறை வைத்தனர்.

இதனிடையே, கடல்வழியாக தப்பிச் செல்ல அதிபர் கோத்தபய ராஜபக்ச திட்டமிட்டிருந்ததாகவும் ஒரு தகவல் வெளியானது. விமான நிலையத்தில் கெடுபிடிகள் அதிகம் இருப்பதாலும், அங்கு போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதாலும் அவர் கடல்வழியாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்து வருவதாகவும், அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்துக்கு தப்பிச் செல்ல முயல்வதாகவும் தகவல்கள் பரவின.

இதற்காக திரிகோணமலை கடல் அருகே உள்ள பகுதியில் இருந்து கடற்படைக்குச் சொந்தமான மிகப்பெரிய படகு மூலம் கோத்தபய ராஜபக்சவும், அவரது உறவினர்களும் கடந்த சனிக்கிழமை திரிகோணமலை பகுதிக்கு வந்ததாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

இதனிடையே தானும், தனது குடும்பத்தாரும் பாதுகாப்பாக வெளியேறும் வரையில் அதிபர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்று அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். நேற்று காலை வரை ஜூலை 13-ம் தேதி (இன்று) பதவி விலகுவேன் என்று அறிவித்து வந்த அதிபர் கோத்தபய திடீரென நேற்று மாலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் மனு: இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்ச, அவரது தம்பி பசில் ராஜபக்ச ஆகியோர் வெளிநாடு செல்ல இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என்று இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசா வழங்க மறுப்பு: இந்நிலையில் அமெரிக்காவில் தங்குவதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச அமெரிக்க நாட்டின் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இலங்கையில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் காரணமாக கோத்தபய கேட்டிருந்த விசா வழங்கப்படாது என்று அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில்தான் இப்போது மாலத்தீவில் கோத்தபய ராஜபக்ச தஞ்சம் அடைந்துள்ளார். அவர் இன்று தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x