சுற்றுலாத் தலம் போல் மாறிய இலங்கை அதிபர் மாளிகை - கவனம் ஈர்க்கும் ‘ஹோம் டூர்’ வீடியோக்கள்

சுற்றுலாத் தலம் போல் மாறிய இலங்கை அதிபர் மாளிகை - கவனம் ஈர்க்கும் ‘ஹோம் டூர்’ வீடியோக்கள்
Updated on
1 min read

கொழும்பு: மக்கள் போராட்டத்தை அடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறியதாக சொல்லப்படும் நிலையில், அதிபர் மாளிகையை அந்நாட்டு மக்கள் சுற்றுலாத் தலம் போல் பார்ப்பதற்கு குவிந்து வருகின்றனர்.

இலங்கையில் மக்களின் போராட்டம் வலுத்துவரும் நிலையில், அதிபர் கோத்தபய, நாளை மறுநாள் ராஜினாமா செய்ய இருக்கிறார். மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்தது. ஆயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை சிறைபிடித்தனர். கடும் பாதுகாப்பையும் மீறி அவர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். போராட்டம் தீவிரமான நிலையில், அதிபர் கோத்தபய தப்பியோடிவிட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

அன்றைய தினம் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து நீந்தினர். இன்னொரு குழுவினர் மாளிகைக்குள் இருந்த சமையலறைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சமைக்கத் தொடங்கினர். இதுபோன்ற காட்சிகள் இணையங்களில் வைரலாகின.

இந்நிலையில், தற்போது அதிபர் மாளிகை சுற்றுலாத் தலம் போல் மாறி இருக்கிறது. அதிபர் மாளிகையை காண இலங்கை மக்கள் கூட்டம் கூட்டமாக தினமும் வந்துசெல்கின்றனர். அவர்களை தடுக்க முடியாமல் திணறும் காவல்துறை வரிசையில் மக்களை அனுமதித்து மாளிகையை பார்வையிட வைக்கின்றனர். அங்கிருக்கும் அறைகளை வியந்து பார்க்கும் மக்கள், புகைப்படம் எடுத்துக்கொள்வது வீடியோ எடுப்பது என உலாவி வருகின்றனர்.

சில யூ-டியூப்பர்ஸ் அதிபர் மாளிகையை ஹோம் டூர் காட்சிகளாக வெளியிட்டு வருகின்றனர். இது வைரலாகி வருகிறது. இலங்கை தமிழர் ஒருவர் இதே போல் ஹோம் டூர் காட்சிகளாக அதிபர் மாளிகையை படம் பிடித்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு வரவேற்பு அதிகமாகி வருகிறது. வீடியோ வெளியிட்ட ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in