'அமைதி காக்கவும்' - போராட்டக்காரர்களுக்கு இலங்கை ராணுவத் தளபதி வேண்டுகோள்

'அமைதி காக்கவும்' - போராட்டக்காரர்களுக்கு இலங்கை ராணுவத் தளபதி வேண்டுகோள்
Updated on
1 min read

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மக்கள் அமைதி காத்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அந்நாட்டு ராணுவத் தளபதி சவேந்திரா சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நிதியம் இலங்கை அரசியல் சூழலை உற்று கவனித்துவருவதாகக் கூறியுள்ளது. நிலையான அரசியல் சூழல் ஏற்பட்டவுடன் பொருளாதார சீரழிவில் இருந்து இலங்கையை மீட்கத் தேவையான உதவிகள் குறித்து ஆலோசிக்கவிருப்பதாகக் கூறியுள்ளது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரி நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, அதிபர் இல்லத்தை நோக்கி வந்த மக்களைத் தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நிலைமை கைமீறி செல்லவே அதிபர் கோத்தபய ராஜபக்ச வரும் 13 ஆம் தேதி தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் தான் பதவி விலக தயாராக இருப்பதாகவும் அனைத்துக் கட்சி ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டவுடன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

அதிபர் இருப்பிடம் தெரியவில்லை: இருபினும் அதிபர் கோத்தபய ராஜபக்ச எங்கு இருக்கிறார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. அவர் ராணுவத் தலைமையகத்தில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இலங்கை கடற்படைக் கப்பலில் பல பெட்டிகள் ஏற்றப்படும் வீடியோ ஒன்று நேற்று இணையத்தில் வெளியானது. அவை அதிபர் கோத்தபயவின் உடைமைகள் என்றும் கூறப்பட்ட்டன். பதற்றமான இந்தச் சூழலில் சபாநாயகர் தான் பொறுப்பு அதிபராக இயங்கும் சூழல் உருவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in