Published : 10 Jul 2022 04:46 AM
Last Updated : 10 Jul 2022 04:46 AM
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை, அலுவலகத்தை சிறைபிடித்தனர். அப்போது, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடியில் 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்ச, மாளிகையில் இருந்து தப்பியோடிவிட்டார். அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் நெருக்கடியால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகினார். இதனால் இலங்கையில் உச்சகட்ட அரசியல் பதற்றம் ஏற்பட்டி ருக்கிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் காஸுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குக் காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி, கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் மாளிகை முன் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
மே 9-ல் இலங்கை முழுவதும் கலவரம் வெடித்ததால், பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மே 12-ல் பிரதமராகப் பதவியேற்றார்.
எனினும், மஹிந்த ராஜபக்சவின் தம்பியான கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டுமென மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவர் பதவி விலக மறுத்ததால், அதிபர் மாளிகை முன் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நேற்று அதிபர் மாளிகையை நோக்கி முன்னேறினர். பாதுகாப்புப் படை வீரர்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசியும் கூட்டம் கலையாததால், தடியடி நடத்தி, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனாலும், போராட்டக்காரர்கள் தேசியக் கொடியை ஏந்தியவாறு, தொடர்ந்து முன்னேறினர்.
தடியடியில் 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். மக்கள் அஞ்சாமல் முன்னேறியதால், வீரர்கள் ஒதுங்கினர். சில ராணுவ வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர் ஆயுதங்களைக் கைவிட்டு, போராட்டக்காரர்களுடன் இணைந்தனர்.
தொடர்ந்து, அதிபர் மாளிகை முழுவதையும் போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்ச, குடும்பத்துடன் தப்பிவிட்டார்.
நீச்சலடித்த இளைஞர்கள்
இதற்கிடையில், அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் இளைஞர்கள் சிலர் நீச்சல் அடித்தும், அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்தும் குதூகலித்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின.
பிரதமர் ரணில் பதவி விலகக் கோரி கொழும்பில் உள்ள அவரது வீட்டையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அங்கு பதற்றமான சூழல் நிலவியதையடுத்து, ராணுவ வீரர்கள், போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அனைத்து கட்சிக் கூட்டம்
இதற்கிடையில், நாடாளுமன்ற அவைத் தலைவர் மஹிந்த யாபா அபேவர்தன நேற்று அவசரக் கூட்டத்தை நடத்தினார். இதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.
அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டுமென இக்கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி, புதிய அதிபரை தேர்வு செய்யலாம் என்று பெரும்பாலான தலைவர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தினார். இதில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் பந்துல குணவர்தனவும் ராஜினாமா செய்துள்ளார்.
தற்காலிக அதிபர்
இலங்கை சட்ட விதிகளின்படி அதிபர் பதவி விலகினால், நாடாளுமன்ற அவைத் தலைவர் தற்காலிக அதிபராகப் பதவியேற்கலாம். இதன்படி, தற்போதைய அவைத் தலைவர் மஹிந்த யாபா அபேவர்தனவை, புதிய அதிபராக நியமிக்க பல்வேறு கட்சித் தலைவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதை பெரும்பாலான தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதன்படி, அடுத்த 30 நாட்களுக்கு அவர் இலங்கையின் அதிபராக நீடிப்பார். அனைத்து கட்சிகள் அடங்கிய புதிய அரசை நியமிப்பார். மேலும், விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவார் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எம்.பி. கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ச தொடங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா எம்.பி.க்களில் பலர் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். அந்தக் கட்சியை சேர்ந்த 16 எம்.பி.க்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிபர் கோத்தபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத, அனுபவமிக்க தலைவரை அதிபராகத் தேர்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித் துள்ளனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்ச தலைமறைவாகி உள்ளார். பிரதமர் பதவியை ரணில் ராஜினாமா செய்துவிட்டார். இதனால் இலங்கையில் உச்சகட்ட அரசியல் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
கோத்தபய ராஜபக்ச எங்கே?
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. கொழும்பு அருகேயுள்ள காட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் புறப்பட்டுச் சென்றதாகவும், கொழும்பு துறைமுகத்தில் இருந்து சில கப்பல்கள் புறப்பட்டுச் சென்றதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் மூத்த செய்தியாளர் சுனந்த தேசப்பிரிய ட்விட்டரில் நேற்று பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவரின் குரல் பதிவை வெளியிட்டார்.
அதில், “அதிபர் கோத்தபய விமானநிலையத்தில் இருக்கிறார். அங்கிருந்து அவர் தப்பிச் செல்ல அனுமதிக்கக்கூடாது. பியுசி 623 என்ற கப்பலில் அதிபரின் சொத்துகள், தங்கம் ஆகியவற்றுடன், அவரது உறவினர்கள் தப்பிச் செல்கின்றனர். அவர்களையும் தப்பவிடக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் கோத்தபய, அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துவிட்டதாகக் கூறினார். எனினும், அவர் தற்போது துபாய் வழியாக, அமெரிக்காவுக்கு தப்பிச் செல்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, இலங்கையின் பத்ரமுல்லையில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் அதிபர் கோத்தபய பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT