1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் புதிய பூமி கண்டுபிடிப்பு

1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் புதிய பூமி கண்டுபிடிப்பு
Updated on
1 min read

பூமியில் இருந்து சுமார் 1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாகக் கருதப்படும் புதிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2009-ம் ஆண்டில் கெப்ளர் என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதிநவீன தொலைநோக்கி பொருத்தப்பட்ட இந்த விண்கலம் பூமியில் இருந்து 150 மில்லியன் கி.மீ. தொலைவில் சுற்றி வருகிறது. இதுவரை 2300-க்கும் மேற்பட்ட கிரகங்களை கெப்ளர் கண்டுபிடித்துள்ளது.

அந்த வரிசையில் பூமியில் இருந்து 1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் புதிய பூமியை கெப்ளர் கண்டறிந்துள்ளது. அந்த கிரகத்துக்கு கெப்ளர்-62எப் என்று நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது பூமியை விட 1.4 மடங்கு பெரிதாக உள்ளது.

பூமியில் 0.04 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடு உள்ளது. இதே போல கெப்ளர் 62எப் கிரகத்திலும் கார்பைன் டை ஆக்ஸைடு இருப்பதாக கருதப்படுகிறது.

அந்த கிரகத்தில் பாறைகளும் கடல்களும் இருக்கக்கூடும். அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. எனவே நிச்சயமாக அங்கு மனிதன் உயிர் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்.

கெப்ளர் 62எப் கிரகமும் இதர 4 கிரகங்களும் சூரியனைப் போன்ற ஒரு பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. அந்த பெரிய நட்சத்திரம் சூரியனைவிட சிறியதா கவும் வெப்பம் குறைந்ததாகவும் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பூமியை போன்ற சில கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கெப்ளர் 62எப் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. எனவே அந்த கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் ‘சூப்பர் பூமி’ என்று செல்லமாக அழைக்கின்றனர். புதிய பூமி குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in