Published : 18 May 2016 10:30 AM
Last Updated : 18 May 2016 10:30 AM

உலக மசாலா: பயோனிக் கை!

லண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்னணுவியலையும் உயிரியலையும் இணைத்து செயற்கை ‘பயோனிக்’ கையை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கை இயற்கை கை போலவே மென்மையாகவும் பல செயல் களைச் செய்யக்கூடிய தாகவும் இருக்கிறது. அத்துடன் இந்தச் செயற்கைக் கையில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்துகொள்ளலாம். டார்ச் லைட்டாகவும் பயன் படுத்திக்கொள்ள முடியும். பொழுதுபோகவில்லை என்றால் பாடல்களைக் கூட கேட்க முடியும்.

“நான் உயிரியல் விஞ்ஞானியாக இருந்தேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு வந்தபோது, ரயிலில் உரசி தண்டவாளத்தில் விழுந்துவிட்டேன். என்னால் அவர்களைக் கூப்பிட முடியவில்லை. கண்காணிப்பு கேமராவில் பார்த்துதான் என்னைத் தூக்கினார்கள். உடல் முழுவதும் ஏகப்பட்ட காயங்கள். நுரையீரல் பாதிப்பு, மண்டையோட்டிலும் முகத்திலும் எலும்பு முறிவு, முதுகுத்தண்டு நொறுங்கிவிட்டது, இடது கையும் காலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. 12 நாட்கள் கோமாவில் இருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினேன். 12 அறுவை சிகிச்சைகள் உடல் முழுவதும் செய்யப்பட்டன. மூன்றரை மாதங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினேன். இடது கைக்குப் பதில் ஒரு கொக்கிதான் பயன்படுத்த முடிந்தது.

என்னால் இந்தக் கொக்கியைக் கையாக நினைக்கவே முடியவில்லை. முழு நேர வேலைக் குச் செல்ல முடியவில்லை. உலகமே இருளானது போல உணர்ந்தேன். தனிமையில் யோசித்தேன். எனக்கு வசதியாக ஒரு செயற்கைக் கையை உருவாக்க முடிவு செய்தேன். நிறையப் படித்தேன். பயோனிக் கையை உருவாக்க ஆரம்பித்தேன். தசை, தோல் போன்றவை உணர்ச்சிகளை எவ்வாறு உணர்கின்றனவோ, அதே போல பயோனிக் கையிலும் சிக்னல்கள், சென்சார்கள் பொருத்தினேன். இந்தக் கை பாட்டரி மூலம் இயங்கும்.

கை செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் பயோனிக் கை செய்கிறது. கை செய்யாத சில வேலைகளையும் இது செய்கிறது. அதனால் இனி நான் கை இல்லை என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. என்னை வைத்தே இன்னும் பல பயோனிக் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறேன். எல்லாம் சரியாக அமைந்தால், எதிர்காலத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு பயோனிக் உறுப்புகள் மிகவும் உதவியாக இருக்கும். என்னை டெர்மினேட்டர் என்று அழைப்பதில் விருப்பம் இல்லை. நான் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன். பகுதி மனிதன், பகுதி இயந்திரம் என்ற தலைப்பில் என்னை வைத்து, பிபிசியில் ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது’’ என்கிறார் ஜேம்ஸ் யங்.

பல வேலைகள் செய்யும் பயோனிக் கை!

ரஷ்யாவைச் சேர்ந்த டாஷிக் ஃப்ரீகெல், கடந்த 13 ஆண்டுகளாக முடியை வெட்டாமல் வளர்த்து வருகிறார். ‘’முடி எவ்வளவு நீளம் வளரும் என்பதைப் பார்ப்பதற்காகவே வளர்க்க ஆரம்பித்தேன். இன்னும் அரையடி வளர்ந்தால் கால் விரல்களைத் தொட்டுவிடும். அதுவரை முடியை வெட்டப் போவதில்லை. மிக நீளமான முடியைப் பராமரிப்பது கடினம்தான். ஆனாலும் இதில் எனக்கு மகிழ்ச்சியே. விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். நான் நினைத்தது போல கால்விரல்களை முடி தொட்டவுடன், முடியை வெட்டி, நன்கொடையாக அளித்துவிடுவேன். அதில் ஏராளமாக விக் தயாரிக்க முடியும். புற்றுநோயால் முடிகளை இழந்தவர்களுக்குப் பயன்படும்’’ என்கிறார் டாஷிக் ஃப்ரீகெல்.

அட! ரியல் ராபுன்செல்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x