Published : 08 Jul 2022 03:00 PM
Last Updated : 08 Jul 2022 03:00 PM

துப்பாக்கிச் சூடு: சிகிச்சைப் பலனின்றி ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம்

மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே

டோக்கியோ: துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 67. அவரது மறைவு ஜப்பான் மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஷின்சோ அபே மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பலவும் இச்சம்பவத்துக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், "எனது இனிய நண்பர்களில் ஒருவரான அபேயின் மறைவு பெருந்துயரையும், வருத்தத்தையும் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

நடந்தது என்ன? - ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அவர் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள நரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கியால் அவரை மர்ம நபர் ஒருவர் சுட்டார்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த இளம்பெண் ஒருவர் அளித்தப் பேட்டியில் "நாங்கள் எல்லோரும் அபேவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோம். திடீரென ஒரு சத்தம் கேட்டது. அபே அதிர்ச்சியில் உறைந்ததுபோல் நின்றார். அது என்னவென்று உடனே ஊகிக்க முடியாமல் நாங்கள் நின்றபோது இன்னொரு முறை அதே சத்தம் கேட்டது. அப்போது எங்களுக்கு அது துப்பாக்கிச் சத்தம் என்று புரிந்தது. அபேவை சுற்றி புகையும் கிளம்பியது.

அபேவின் பின்னால் நின்றிருந்த நபர் தான் அதை செய்திருந்தார். உடனே போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். எல்லோரும் அபேவை நோக்கி ஓடினோம். அவர் கழுத்தில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. ஏதோ ஷாட் கன் வைத்து சுட்டதாக எல்லோரும் பேசிக் கொண்டனர்" என்றார்.

நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்: ஷின்சோ அபே நீண்ட காலமாக ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். முதலில் 2006 ஆம் ஆண்டு அவர் பிரதமரானார். ஓராண்டு மட்டுமே அவர் பதவி வகித்தார். பின்னர் 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் அவர் தொடர்ந்து பிரதமராக இருந்தார். கடந்த ஆகஸ்ட் 2020ல் அவர் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அப்போது அவர் அளித்தப் பேட்டியில், "நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனக்கு மக்கள் கொடுத்த பணியை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையை என் உடல்நிலை எனக்கு அளிக்கவில்லை. ஆகையால் நான் பிரதமராக இருக்க விரும்பவில்லை என்று கூறி ராஜினாமா" செய்தார். அவரது இந்தப் பேச்சு கவனம் பெற்றது.



போராடிய மருத்துவர்கள்: ஷின்சோ அபேவை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாகப் போராடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய பிரதமர் ஃபியூமியோ கிஷிடோவும் இதனைத் தெரிவித்திருந்தார். இருப்பினும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் அபேவுக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்தே அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவே தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், அவர் மறைவு உறுதியாகியுள்ளது.

கடுமையான சட்டங்கள்: ஜப்பான் நாட்டில் உலகிலேயே மிகக் கடுமையான துப்பாக்கி பயன்பாட்டுச் சட்டம் உள்ளது. அந்நாட்டின் மக்கள் தொகை 12.5 கோடி. அங்கு துப்பாக்கி லைசன்ஸ் பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஜப்பான் நாட்டு குடிமகனாகவே இருந்தாலும் கூட அங்கே ஒருவர் துப்பாக்கி வைத்துக் கொள்ள காவல்துறையின் பல்வேறு கெடுபிடிகளை எதிர்கொள்ள வேண்டும்.

அதனாலேயே அங்கே இதுபோன்ற துப்பாக்கி வன்முறைகள் மிகவும் குறைவு. அப்படியிருந்தும் நாட்டின் முன்னாள் பிரதமர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருப்பது அந்நாட்டு ஆட்சியாளர்கள், பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு ஒன்றை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x