

கடந்த 19-ம் தேதி கடலில் விழுந்த எகிப்து பயணிகள் விமானம் குண்டு வெடிப்பு மூலம் தகர்க்கப்பட்டுள் ளது என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு 66 பேருடன் ‘எகிப்து ஏர்’ நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த வியாழக்கிழமை புறப்பட்டது. இந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறை தொடர்பை இழந்தது.
இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து 290 கி.மீட்டர் தொலைவில் விமானத்தின் பாகங்களும் பயணிகளின் உடல் பாகங்களும் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பயணிகளின் உடல்கள் சிதைந்து சிதறி விழுந்துள்ளன. இதுவரை 80 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. எந்தவொரு உடலும் முழுமையாக மீட்கப்படவில்லை. மேலும் விமானத்தின் பாகங்களும் பல துண்டுகளாக உடைந்துள்ளன. எனவே குண்டுவெடிப்பு மூலமே விமானம் தகர்க்கப்பட்டுள்ளது என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எகிப்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியபோது, விமானத்தின் கருப்பு பெட்டிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவை கிடைத்த பிறகே உண்மை தெரியவரும் என்று விளக்கம் அளித்தனர்.