Published : 07 Jul 2022 03:02 PM
Last Updated : 07 Jul 2022 03:02 PM

அடுத்தடுத்த ராஜினாமாக்கள், அமைச்சர்களின் அழுத்தங்கள்: பதவி விலகுகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: அடுத்தடுத்த ராஜினாமாக்கள், அமைச்சர்களின் அழுத்தங்கள் எதிரொலியாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருங்கிய வட்டாரம் இது குறித்து கூறுகையில், "கடந்த 48 மணி நேரத்தில் பிரிட்டன் ஆளுங்கட்சியில் நடந்துவரும் நிகழ்வுகளைக் கண்டு ‘எதிர்த்துப் போராடுவேன்’ என்று போரிஸ் கூறினார். ஆனால், இப்போது அவரே தான் பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். அவர் அக்டோபர் மாதம் வரை கேர்டேக்கர் பிரதமராக நீடிப்பார். கன்சர்வேட்டிவ் கட்சியின் வருடாந்திர கூட்டத்திற்காக புதிய தலைவர் தேர்வாகும் வரை அவர் பிரதமராக பொறுப்பு வகிப்பார்" என்று தெரிவித்துள்ளது.

பதவி விலகல் தொடர்பாக இன்றைக்கே போரிஸ் ஜான்சன் முக்கிய அறிவிப்பை வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெருக்கடி பின்னணி என்ன? - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டை வழிநடத்துவார் என்று தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் நேற்று பதவி விலகினர்.

இதனையடுத்து நாட்டின் புதிய நிதியமைச்சராக நதீம் ஜஹாவி நியமிக்கப்பட்டார். ஆனால் ஜவாஹியும் பிரதமர் பக்கம் நிற்கவில்லை. அவர் ஒரு நீண்ட கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

"பிரதமர் அவர்களே... நீங்கள் பிரதமராக இருப்பது நீடிக்கப்போவதில்லை. இது இன்னும் மோசமாகவே செய்யும். தனிப்பட்ட முறையில் உங்களுக்கும், கட்சிக்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் இது சங்கடத்தையே தரும். ஆகையால் இந்த தருணத்தில் நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும். நீங்கள் ராஜினாமா செய்தே ஆக வேண்டும்" என்பதே அந்தக் கடிதத்தின் சாராம்சம்.

— Nadhim Zahawi (@nadhimzahawi) July 7, 2022

பிறந்தநாள் விருந்து தொடங்கி வரி உயர்வு வரை: போரிஸ் ஜான்சனுக்கு எதிரான போர்க்கொடி ஏதோ 2 நாட்களுக்கு முன்னரே எழுந்தது என்று அணுகக் கூடாது. போரிஸ் ஜான்சன் 2019ல் பிரிட்டன் பிரதமராக பதவியேறார். அந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தொடங்கிய கரோனா தொற்று ஓரிரு மாதங்களிலேயே உலகை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. பிரிட்டன் மோசமான கரோனா அலைகளை சந்தித்தது. இரு தவணை தடுப்பூசிக்குப் பின்னரும் அங்கு கரோனா அலை ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில்தான் கரோனா ஊரடங்குக்கு இடையே பிறந்த நாள் விருந்து நடத்தி சர்ச்சையில் சிக்கினார் போரிஸ் ஜான்சன. ஜூன் 2020-இல் அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதன்மூலம், பிரிட்டனின் பிரதமராக ஆட்சியில் உள்ள ஒருவர் மீது சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்படும் முதல் பிரதமராக அவர் ஆனார்.

இதுவே அவர் மீது சொந்த கட்சியில் எதிர்ப்பு கிளம்ப காரணமாகியது. இது ஒருபுறம் இருக்க, போரிஸ் ஜான்சன் வரி உயர்வை அமல்படுத்தினார். இதன் மீதும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கடந்த மாதம் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் போரிஸ் ஜான்சனின் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த மொத்தம் உள்ள 359 எம்.பிக்களில், 211 எம்.பி.க்கள் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் 148 எம்.பிக்கள் அவருக்கு எதிராகவும் வாக்களித்தனர். அப்போதே அவரது தலைமை ஆட்டம் கண்டதும் உறுதியாகிவிட்டது.

இந்த எதிர்ப்புகள் எல்லாம் வலுப்பெற்று நிதியமைச்சர், சுகாதார அமைச்சர் இன்னும் சில ஜூனியர் அமைச்சர்கள் ராஜினாமா வரை நீண்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x