

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் உயிருக்கு ஆபத்து இல்லை, அவர் பத்திரமாக மீட்கப்படுவார் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் அலெக்ஸ் பிரேம் குமார் (47) ஜூன் 2-ம் தேதி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
அவரை பத்திரமாக மீட்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து பாதிரியாரை மீட்க ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பாதிரியார் பத்திரமாக உள்ளார்
இதுகுறித்து ஆப்கானிஸ் தானுக்கான இந்தியத் தூதர் அமர் சின்ஹா காபூலில் நிருபர்களிடம் கூறியதாவது:
தீவிரவாதிகள் கடத்திச் சென்ற அலெக்ஸ் பிரேம் குமாரை தீவிரமாக தேடி வருகிறோம். அவர் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்தாலும் பத்திரமாக உள்ளார். ஹெராத் பகுதியில் அவரை கடத்தி வைத்திருக்கலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அவரை விரைவில் மீட்டுவிடலாம் என்று உறுதியாக நம்புகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் என்றார்.
காஷ்மீரை தாக்க சதி
காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவது குறித்து இந்தியத் தூதரிடம் கேட்டபோது, இங்கு நேட்டோ படையினருக்கு எதிராக பல்வேறு கூலிப்படைகள் போரிட்டு வருகின்றன. நேட்டோ படை வாபஸ் பெறப்பட்ட பின்னர் அவர்கள் வேலையிழக்கக்கூடும். அதனால் புதிய எதிரியை தேடலாம் என்றார்.