இத்தாலியில் கடும் வறட்சி: 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

வறண்டு போன போ நதி
வறண்டு போன போ நதி
Updated on
1 min read

இத்தாலியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக கடும் வறட்சி நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கு 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “இத்தாலியின் மிக நீளமான போ நதியை ( போ நதி அளவு 650 கிமீ) சுற்றியுள்ள 5 மாகாணங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியினால் நாட்டின் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30%க்கும் அதிகமான விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வறட்சி தடுக்கும் பொருட்டு வடக்கில் உள்ள ஐந்து மாகாணங்களில் (லோம்பார்டி, எமிலியா-ரோமக்னா, பிரியூலி வெனிசியா கியுலியா, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ )இத்தாலி அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது.

வறட்சி கடுமையாக ஏற்பட்டுள்ள 5 மாகாணங்களில் தண்ணீர் பற்றாக்குறையை நீக்க சுமார் 36.5 மில்லியன் யூரோவை இத்தாலி அரசு ஒதுக்கி உள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

வறட்சியை கட்டுப்படுத்தவே அவசர நிலை பிரகனடம் செய்யப்பட்டுள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. மேலும் வறட்சி நிலைமையை சமாளிக்க சிறப்பு குழுவையும் அமைத்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை இத்தாலி எதிர்கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. அதி தீவிர மழை, கடும் வறட்சி, புயல், வெள்ளம் போன்றவற்றால் மனிதர்களும் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது என்ற எச்சரிக்கையை சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in