சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக நடந்த தன்பாலீர்ப்பு இணையர்களின் திருமணம்

சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக நடந்த தன்பாலீர்ப்பு இணையர்களின் திருமணம்
Updated on
1 min read

ஜெனிவா: சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக தன்பாலீர்ப்பு இணையர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் 9 மாதங்களுக்கு முன்னர் அனைவருக்கும் திருமணம் ('Marriage for All' law) சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பொதுமக்களில் 64% பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் தற்போது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, முதல் முறையாக இன்று (ஜூலை 1) தன்பாலீர்ப்பு இணையர்கள் பலரும் திருமணம் செய்து கொண்டனர்.

அலின், லாரே ஆகியோர் சுவிட்சர்லாந்தில் இந்த முறைப்படி முதலில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினராக அறியப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் 21 ஆண்டு வருடங்களாக காதலில் இருந்திருக்கிறார்கள். இவர்களது திருமணத்தில் நூற்றுக்கணக்கான நண்பர்களும், உறவினர்களும் கலந்து கொண்டனர்.

இந்தத் திருமணம் குறித்து ஜெனிவா மேயர் மரியா பார்பே கூறும்போது, “இது மிகப் பெரிய தருணம். இந்த திருமணங்கள் மூலம் வலுவான செய்தி, சமூகத்திற்கு அனுப்பப்படுகிறது” என்றார்.

தன்பாலின ஈர்ப்புத் திருமணத்தை ஏற்றுக் கொண்ட கடைசி ஐரோப்பிய நாடாக சுவிட்சர்லாந்து உள்ளது. தன்பாலின திருமணத்திற்கு ஐரோப்பாவில் நெதர்லாந்து நாடே முதலில் அனுமதி அளித்தது.

"அனைவருக்கும் திருமணம்" சட்டத்தை கொண்டு வருவதில் சுவிட்சர்லாந்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. வலது சாரி அமைப்புகள் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனினும் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி சுவிட்சர்லாந்து அரசு இதில் வெற்றி கண்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in