

கூட்டாட்சி முறை என்பது இலங்கையைப் பிரிப்பதற்கானது அல்ல என்று தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்குப் பகுதியில் உள்ள வவுனியாவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த விக்னேஸ்வரன் கூறியதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளை ஒன்றாக கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கான ஒரு ஏற்பாடுதான் கூட்டாட்சி முறை. இது நாட்டை பிரிப்பதற்காக அல்ல. கூட்டாட்சி முறையால் நாடு பிளவுபடாது என்பதற்கு உலகில் பல உதாரணங்கள் உள்ளன. எனவே, நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் கூட்டாட்சி முறை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்லாது இதர 7 மாகாணங்களிலும் கூட்டாட்சி முறையை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் சிறுபான்மையின தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான விக்னேஸ்வரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கூட்டாட்சி முறையை அமல்படுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்கு இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ளவர்கள் (சிங்களர்கள்) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.