Published : 15 May 2016 12:11 PM
Last Updated : 15 May 2016 12:11 PM

இந்திய எல்லைப் பகுதிகளில் படைகளை குவிக்கிறது சீனா: அமெரிக்க ராணுவம் எச்சரிக்கை

இந்திய எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் கூடுதல் படைகளை குவித்து வருகிறது என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானின் குவாதர் பகுதி யில் சீனாவின் உதவியுடன் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த துறைமுகத்தை சீனா ராணுவரீதியாக பயன்படுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல இலங்கை தலைநகர் கொழும்பில் துறைமுக நகர திட்டத்தை செயல்படுத்த சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்குள்ள நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு எடுக்க இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் நட்பு நாடான மியான் மரில் ராகைன் மாகாணம், கயாக்பியூ பகுதியில் 2 துறைமுகங்களை சீன நிறுவனம் அமைக்கிறது. அந்த துறைமுகங் களையும் ராணுவரீதியாக சீனா பயன்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக காய் நகர்த்தி வரும் சீனா மும்முனைகளிலும் மறைமுகமாக கடற்படைத் தளங்களை அமைத்து வருவதாக பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தப் பின்னணியில் இந்திய எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் கூடுதல் படைகளை குவித்து வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாது காப்புத் துறையின் கிழக்கு ஆசியா வுக்கான துணை செயலாளர் ஆபிரகாம் டென்மார்க், வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் ஏராளமான படை வீரர்களை குவித்து வருகிறது. அதற்கான உண்மை யான காரணம் என்ன என்பது தெரிய வில்லை. இந்திய, சீன எல்லைப் பகுதி 4,057 கி.மீட்டர் வரை நீண்டுள்ளது. அந்தப் பகுதிகளில் இப்போதும் பதற்றம் நீடிக்கிறது. குறிப்பாக அருணாச்சலப் பிரதேசம், காஷ்மீரின் அஸ்காய் சின் பிராந்தியத்தில் பதற்றம் அதிகமாக உள்ளது.

அண்மைக்காலமாக உலகின் பல்வேறு பகுதிகளில் சீன ராணுவம் கால் பதித்து வருகிறது. குறிப்பாக தனது கடற் படையை வலுப்படுத்தும் நடவடிக் கைகளில் அந்த நாடு ஈடுபட்டு வருகிறது. இதில் பாகிஸ்தானில் சீன ராணுவ நடவடிக்கைகள் அதிகம் உள்ளன. சீன தயாரிப்பு ஆயுதங்களை வாங்கும் நாடுகள் பட்டியலிலும் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஸ்டன் கார்டர் அண்மையில் இந்தியா சென்றார். அவரின் பயணம் பயனுள்ளதாக அமைந்தது. இந்தியா வுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவ உறவு வலுவடைந்து வருகிறது. சீனாவை கருத்திற் கொண்டு இந்தியாவுடன் அமெரிக்கா நெருங்கவில்லை. இரு நாடுகளும் இயற்கையான நட்பு நாடுகள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எல்லையில் உஷார்நிலை

கடந்த 1962 அக்டோபரில் இந்தியா வுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போது காஷ்மீரின் அக்சாய் சின் மற்றும் வடகிழக்கு மாநில எல்லைகளில் இருதரப்புக்கும் இடையே மிகக் கடுமையான போர் நடந்தது.

இப்போது எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் மீண்டும் படை வீரர்களை குவித்து வருவதாக பென்டகன் எச்சரிக்கை விடுத்திருப்பதால் இந்திய ராணுவ தரப் பிலும் கூடுதல் வீரர்கள் குவிக்கப்படுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x