Published : 29 Jun 2022 04:03 AM
Last Updated : 29 Jun 2022 04:03 AM

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கூட்டறிக்கை - கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க அமெரிக்கா, இந்தியா நாடுகள் உறுதி

முனிச்: ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுதியேற்றன.

ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சிமாநாடு ஜெர்மனியில் நடைபெற்றது. இதில், இந்தியப் பிரதமர் மோடி, இந்தோனேசியா, அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, செனகல் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் ஜி7 நாடுகளும், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் வெளியிட்டன. அதில் கூறியிருப்பதாவது:

பருவநிலை மாறுபாடு, கரோனா தொற்று உள்ளிட்ட சர்வதேச சவால்களுக்கு ஒன்றிணைந்து தீர்வுகாண வேண்டும். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஆதரவளிக்க வேண்டும். நேர்மையாக தேர்தல் நடத்தப்படுவதை ஊக்குவிக்க வேண்டும்.

பருவநிலை மாறுபாட்டைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பஞ்சத்தைத் தடுக்க, உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எரிசக்தி பற்றாக்குறையைப் போக்க சீரான விநியோக சங்கிலியை உறுதிசெய்ய வேண்டும்.

கரோனா தொற்றைச் சமாளிக்க, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஊழல், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க வேண்டும். சர்வதேச அளவில் சமச்சீரான வர்த்தகத்தை உறுதி செய்ய வேண்டும்.

இணைய வழி தாக்குதல்களை முறியடிக்க, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். மனித உரிமையாளர்கள், ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் சமூக ஆர்வலர்களைப் பாதுகாக்க வேண்டும்.

அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்க வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி7 மாநாட்டின் பருவநிலை, எரிசக்தி, சுகாதாரம் குறித்த அமர்வில் பிரதமர் மோடி பேசும்போது, "இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் பூமியைக் காக்கும், நேசிக்கும் மக்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான், பருவ நிலை மாறுபாட்டைத் தடுத்து, புவி வெப்பமயமாவதையும் தடுக்க முடியும்" என்றார்.

இதேபோல, உணவுப் பாதுகாப்பு, பாலின சமத்துவம் குறித்த அமர்வில் பிரதமர் பேசும்போது, "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கும், பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கும் தேவையான உணவு தானியங்களை இந்தியா வழங்கி வருகிறது. இந்தியாவின் வேளாண் நடைமுறைகள் ஜி7 நாடுகளில் பின்பற்றப்படுவது பெருமிதம் அளிக்கிறது. அடுத்த ஆண்டை, சர்வதேச தினை ஆண்டாகக் கொண்டாட உள்ளோம். எனவே, தினை போன்ற சத்தான உணவு தானிய உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.

உலகத் தலைவர்களுக்கு கலைநயமிக்க பரிசுகள் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி

ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களுக்கு, பிரதமர் மோடி கலைநயமிக்க பரிசுகளை அளித்து கவுரவப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கலைநயமிக்க குலாப் மீனாகாரி புரூச் மற்றும் கஃப்லிங்க் செட்டுகளை வழங்கினார்.

உ.பி.யின் புலந்த்ஷெகரில் தயாரிக்கப்பட்ட, கலைநயமிக்க தேநீர்க் கோப்பைகள் மீது, பிளாட்டினத்தால் ஓவியம் வரையப்பட்ட கலைப்பொருளை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மோடி பரிசாக வழங்கினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, காஷ்மீரில் கையால் நெய்யப்பட்ட பட்டுக் கம்பளத்தையும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு, ஜரி ஜர்தோஸி பெட்டியில் வைக்கப்பட்ட அத்தர் வாசனை திரவிய பாட்டில்களையும் பிரதமர் பரிசாக அளித்தார்.

இத்தாலி பிரதமர் மரியா தெராவிக்கு மார்பிள் கல்லால் செய்யப்பட்ட, டேபிள் டாப் பரிசுப் பொருளை அளித்தார். ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ், மொராதாபாதில் உருவாக்கப்பட்ட, நிக்கல் பூசப்பட்ட பித்தளை குவளை கலைப்பொருட்களை பரிசாகப் பெற்றுக் கொண்டார்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு, கருப்பு வண்ணங்களால் ஆன, கலைநயமிக்க மண் பாண்டங்களை வழங்கினார்.

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுக்கு, டோக்ரா கலைப்பொருட்களை பிரதமர் பரிசாக அளித்தார். ராமாயணத்தை மையப் பொருளாகக் கொண்டு, இந்த கலைப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு, நந்தி உருவம் கொண்ட டோக்ரா கலைப்பொருளையும், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவுக்கு, ராமர் தர்பார் சிற்பத்தையும், செனகல் அதிபர் மேக்கி சாலுக்கு கலைநயமிக்க மூஞ்ச் வகை கூடைகள், தரை விரிப்புகளையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x