Published : 29 Jun 2022 04:15 AM
Last Updated : 29 Jun 2022 04:15 AM

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபிக்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது விமானநிலையத்துக்கு நேரடியாக வந்து, வரவேற்று அழைத்துச் சென்றார். படம்: பிடிஐ

அபுதாபி: ஜெர்மனியில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஐக்கிய அரபு அமீரக தலைநகரம் அபுதாபி சென்றார். அந்நாட்டின் மரபுப்படி, மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் விமானநிலையத்துக்கு வந்து, உலகத் தலைவர்களை வரவேற்பது வழக்கம்.

ஆனால், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது, மரபுகளை உடைத்து, நேரடியாக விமானநிலையத்துக்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். இரு தலைவர்களும் ஆரத்தழுவி, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அந்நாட்டின் அரச குடும்பத்தினரும் விமானநிலையத்துக்கு வந்திருந்தனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில், "எனது தம்பி, அதிபர் ஷேக் முகமது நேரடியாக விமானநிலையத்துக்கு வந்து வரவேற்றது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. உள்ளத்தை தொட்டுவிட்டது. அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக அதிபராக இருந்து, மே 13-ல் உயிரிழந்த ஷேக் கலீபாவுக்கு அபிதாபியில் நேற்று இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், புதிய அதிபர் ஷேக் முகமதுவுடன், இருநாட்டு பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியாவுடன் அதிக வர்த்தகத்தில் ஈடுபடும் நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து கோதுமை, மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, அண்மையில் முகமது நபி குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அரபு நாடுகள் அதிருப்தி தெரிவித்திருந்தன. "நுபுர் சர்மா கூறியது தனிநபர் கருத்து, இந்தியாவின் நிலைப்பாடு கிடையாது" என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், பாஜகவில் இருந்து நுபுர் சர்மா நீக்கப்பட்டார். முகமது நபி விவகாரத்துக்குப் பிறகு முதல்முறையாக அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு, இரு நாடுகளின் நட்புறவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x