கருக்கலைப்புச் சட்டம்: உலக நாடுகளின் ‘நிலை’ என்ன? - ஒரு பார்வை

கருக்கலைப்புச் சட்டம்: உலக நாடுகளின் ‘நிலை’ என்ன? - ஒரு பார்வை
Updated on
2 min read

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அங்கு மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கருக்கலைப்புக்கு எதிரான இத்தீர்ப்பின் மூலம் அமெரிக்கா 150 வருடங்கள் பின்னால் சென்று விட்டது என்ற விமர்சனக் குரல்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

கடந்த 1973-ம் ஆண்டு ரோ vs வேட் வழக்கில், அமெரிக்க அரசியல் சாசனத்தின் 14-வது திருத்தத்தின் படி கர்ப்பிணிகள் கருக்கலைப்பு செய்வதற்கு உரிமை உள்ளது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, எத்தனை வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிப்பது என்பது உட்பட பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், மிசிசிபி மாகாண அரசு 2018-ல் கருக்கலைப்புக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றியது. இதன்படி 15 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்ய முடியாது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், மாகாண அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மிசிசிபி மாகாண அரசின் சட்டம் ரோ வெர்சஸ் வேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், மிசிசிபி மாகாண அரசின் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் பல மாகாணங்களில் குறிப்பாக குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அமெரிக்க பெண்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றனர். போராட்டங்களிலும் பங்கெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கருக்கலைப்பில் உள்ள விதிமுறைகள் பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.

கருக்கலைப்பில் இந்தியாவின் நிலை: இந்தியாவை பொறுத்தவரை கருக்கலைப்பு தொடர்பான சட்டம் சற்று நேர்மறையாக உள்ளது. கடந்த ஆண்டு திருத்தப்பட்ட கருக்கலைப்பு சட்டத்தின்படி கருக்கலைப்புக்கான காலம் 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெண் 12 வாரங்கள் கர்ப்பமாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கருக்கலைப்பு செய்யலாம் என்று இருந்தது. அதே நேரத்தில், 12-24 வாரங்களாக இருந்தால் அவர் இரண்டு மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது கட்டாயமானது.

கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ள நாடுகள்: உலகளவில் செனகல், மவுரிடானியா, எகிப்து, லாவோஸ், பிலிப்பைன்ஸ், எல் சால்வேடார், போலந்து மற்றும் மால்டா என 24 நாடுகளில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் சட்டத்திற்கு விரோதமான முறையில் கருக்கலைப்பு செய்தால் பெண்கள் சிறை தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். கருக்கலைப்பு என்பது இந்த நாடுகளில் மோசமான கொலை குற்றமாகவே பார்க்கப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடுகள்: பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது அல்லது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நைஜீரியாவில், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது. ஜிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானா போன்ற நாடுகளில் மைனர், பாலியல் வன்புணர்வை கருத்தில் கொண்டு கருக்கலைப்புக்கு அனுமதிக்கப்படுகிறது.

அனுமதியும் கட்டுப்பாடுகளும்: உலகின் 50 நாடுகளில் கருக்கலைப்பு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. லிபியா, இந்தோனேசியா, நைஜீரியா, ஈரான் மற்றும் வெனிசுலா உட்பட பல நாடுகள் பெண்ணின் உடல்நிலை ஆபத்தில் இருந்தால் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கின்றன.

துருக்கி, ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளிலும் அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கருக்கலைப்புக்கு எளிமையாக அனுமதிக்கும் நாடுகள்: கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் கருக்கலைப்புக்கு பெரிய கட்டுப்பாடுகள் இல்லை. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் கருக்கலைப்புக்கு சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் 12 வார கரு வரை கருக்கலைப்புக்கு அனுமதி உண்டு. சட்டத்துக்கு புறம்பாக கருக்கலைப்பு செய்பவர்கள் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

நியூசிலாந்து: நியூசிலாந்தை பொறுத்தவரை அங்கு 2020-ம் ஆண்டு கருக்கலைப்புக்கான வாரம் 20 ஆக அதிகரிக்கப்பட்டது.

இவ்வாறு உலக அளவில் கருக்கலைப்புக்கான சட்டம் அமைந்துள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் கருக்கலைப்பு எதிரான தீர்ப்பு உலக அளவில் மீண்டும் பெண்கள் தங்கள் உரிமைகளுக்குப் குரல் கொடுப்பதற்கான மைய புள்ளியாக அமைந்திருக்கிறது என்றால் மிகையல்ல.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in