இலங்கையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: பலி 11 ஆக அதிகரிப்பு; 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: பலி 11 ஆக அதிகரிப்பு; 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
Updated on
1 min read

இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து பேரிடர் நிர்வாகத் துறை செய்தித் தொடர்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியதாவது:

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, மொத்தம் உள்ள 25-ல் 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 47,922 குடும்பங்கள் அல்லது 2 லட்சத்து 7 ஆயிரத்து 556 பேர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

இதில் 1.34 லட்சம் பேர் 176 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 68 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின. மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மின்சார கம்பிகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் கொழும்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெரும்பாலான சாலைகள் நீரில் மூழ்கி உள்ளன. மழை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேரைக் காணவில்லை. ராணுவம் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இலங்கை வானிலை ஆய்வு மைய அதிகாரி லலித் சந்திரபாலா கூறும்போது, “குறைந்த காற்றழுத்தம் காரணமாக மழை பெய்தது. இப்போது அந்த காற்றழுத்தம் தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்துவிட்டது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in