

தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் எழுதிய தி வெஜிடேரியன் நாவல் நடப்பாண்டுக்கான மேன் புக்கர் பரிசை வென்றுள்ளது.
சர்வதேச அளவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது மேன் புக்கர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
2016-ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு தி வெஜிடேரியன் நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாவல் பெண்கள் மனித குரூரத்தைப் புறக்கணிப்பதும், இறைச்சி உண்பதை விட்டுவிடுவதும் பற்றி விவரிக்கிறது.
மேன் புக்கர் பரிசுக்கான போட்டியில், நோபல் பரிசு பெற்ற ஓர்ஹான் பமுக், எலீனா ஃபெரான்டே உள்ளிட்டோரின் படைப்புகள் உட்பட 155 புத்தகங்களை வீழ்த்தி ஹான் காங் இப்பரிசை வென்றுள்ளார். அவருக்கு 50 ஆயிரம் பிரிட்டன் பவுண்டுகள் (சுமார் ரூ.48 லட்சம்) ரொக்கரிப்பரிசு வழங்கப்பட்டது.
இத்தொகையை, நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டெபோரா ஸ்மித்துடன் நாவலாசிரியர் ஹான் காங் பகிர்ந்து கொண்டார்.
தி வெஜிடேரியன் நாவலை போர்டோபெல்லோ புக்ஸ் வெளியிட்டிருந்தது. இயோங் ஹை என்ற குடும்பத்தலைவி பற்றிய கதை இது. தென்கொரியாவில் இறைச்சி உண்ணுதலைக் கைவிடுதல் என்பது வழக்கத்தில் இல்லாதது. இயோங் ஹை இறைச்சியைக் கைவிட எடுக்கும் முடிவு, பின்னணி, தொடர்விளைவுகளை இந்தநாவல் விவரித்துச் செல்கிறது