Published : 18 Jun 2022 05:31 PM
Last Updated : 18 Jun 2022 05:31 PM

தலிபான்கள் ஆட்சியில் பயங்கரவாதம் அதிகரிப்பு: இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் கவலை

இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மாமுண்ட்சாய்

புதுடெல்லி: தலிபான்கள் ஆட்சிக்குப் பிறகு தங்கள் நாட்டில் பயங்கரவாதம் அதிகரித்துள்ளதாக இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மாமுண்ட்சாய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் ஃபரித் மாமுண்ட்சாய் கூறும்போது, “ஆப்கனில் கடந்த ஆகஸ்ட் மாதல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதலே நாடு முழுவதும் பயங்கரவாதங்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கனின் தலைமுறைகள் இருண்ட தருணங்களைச் சந்தித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளுடன் சமரசமான உறவில் தலிபான்கள் உள்ளனர். ஆப்கனில் ஐஎஸ்ஏ தீவிரவாத அமைப்புக்கு பலம் அதிகரித்து இருக்கிறது. ஐஎஸ்ஏ அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். அய்-காய்தாவும் பலம் பெற்று வருகிறது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும்வரை அங்கு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கும். அரசியல் களத்தில் எந்த மாற்றமும் நிகழாதவரை இது இவ்வாறே தொடரும்.

ஆப்கானிஸ்தானில் 21 பயங்கரவாதக் குழுக்கள் இருக்கின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடி அத்தகைய குழுக்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு "சரியான" அடித்தளத்தை வழங்கி வருகிறது.

ஆப்கானிஸ்தான் பலவீனமானது மற்றும் ஒரு தோல்வியுற்ற நாடாக மாறி உள்ளது. வேலை இல்லை, பணம் இல்லை. மக்கள் கடினமான பொருளாதார சூழ்நிலைகளில் உள்ளனர். இதுவே பயங்கரவாத குழுக்களுக்கு அவர்களது அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பதற்கு சரியான களமாக உள்ளது.

நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். மேற்கு நாடுகளால் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளோம். ஆப்கானியர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள். பயங்கரவாதத்துக்கு விலை கொடுத்து கொண்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி வந்தது முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களை முடக்கும் நடவடிக்கையில் தலிபான் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x