

வாஷிங்டன்: உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் ஆடையை சேதப்படுத்தியதற்காக கிம் கர்தாஷியன் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
மெட் காலா நிகழ்ச்சி கடந்த மாதம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து பிரபலங்கள் பலரும் விதவிதமான ஆடைகள் அணிந்து வழக்கம் போல நூற்றுக்கணக்கான கேமராக்களுக்கு முன் போஸ் கொடுத்தனர். இதில் ஒரு ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அது மறைந்த அமெரிக்க நடிகை மர்லின் மன்றோவின் ஆடை. இந்த ஆடையை அமெரிக்காவின் சர்ச்சை நாயகியும், மீடியா பெர்சனாலிட்டியுமான கிம் கர்தாஷியன் விலைக்கு வாங்கி அணிந்து வந்திருந்தார். இதுவே சர்ச்சைகளுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
மர்லின் மன்றோவின் நூற்றுக்கணக்கான ஆடைகளில் இந்த ஆடைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று நீங்கள் கேட்கலாம். 1962-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் ஹெஃப் கென்னடியின், பிறந்த நாளின்போது மர்லின் இந்த ஆடையை அணிந்துதான் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடியிருந்தார். இன்றளவும் அந்த வீடியோ பிரபலமாக உள்ளது. (வீடியோவை இதில் காணலாம்).
மர்லின் மன்றோவின் ஆடையை அணிந்ததற்கு கிம் கர்தாஷியனுக்கு எந்த தகுதியும் இல்லை என்று அப்போதே சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் கிம் கர்தாஷியன் மர்லின் ஆடையை சேதப்படுத்திவிட்டதாக மர்லினின் ஆடையை சேகரித்து வைக்கும் அருங்காட்சியகம் குற்றம் சுமத்தி உள்ளது.
| யார் இந்த மர்லின் மன்றோ: உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நடிகையும், பாடகியுமான மர்லின் மன்றோ, ஹாலிவுட் திரை உலகத்தையே கலக்கியவர். விடுவிக்க முடியாத பல புதிர்களுக்குள் தன்னை ஒளித்து வைத்திருப்பவர். 1950-களில் ஹாலிவுட்டின் கனவு தேவதையாக வலம் வந்த மர்லின் மன்றோ, தனது இறுதி நாட்களில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, குடும்பப் பிரச்சினைகளால் அவதியுற்றார். 36 வயதில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் இன்னும் புதிராகவே இருந்து வருகிறது. |
கிம் கர்தாஷியன் அணிந்த பிறகு, ஆடையில் இருந்த முத்துகள் பல கீழே விழுந்திருப்பதாகவும், இன்னும் சில முத்துகள் விழும் நிலையில் இருப்பதாக மர்லின் மன்றோவின் ஆடைகளை சேகரித்து வைத்திருக்கும் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நினைவுச் சின்னங்களை சரிபார்க்கும் சேகரிப்பாளரான ஸ்காட் ஃபோர்ட்னர் கூறும்போது, “நான் அருங்காட்சியகத்தைத்தான் குற்றம் சொல்வேன். ஏனெனில் அவர்கள்தான் ஆடையை அணிய அனுமதித்தனர். ஒவ்வொரு பிரபலமும் இந்த ஆடையை அணிய வாய்ப்பு அளித்தால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அதைத்தான் கிம்மும் செய்திருக்கிறார். இந்த ஆடை தற்போது முழுவதுமாக சேதமடைந்துள்ளது. கிம் அல்ல யார் அணிந்திருந்தாலும் இந்த ஆடை சேதமடைந்திருக்கும்” என்றார்.
மர்லின் மன்றோவின் ஆடையை சேதப்படுத்தியதற்காக, கிம் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.