என்.எஸ்.ஜி.-யில் இந்தியா: பாகிஸ்தான் எதிர்ப்பை புறக்கணித்தது அமெரிக்கா

என்.எஸ்.ஜி.-யில் இந்தியா: பாகிஸ்தான் எதிர்ப்பை புறக்கணித்தது அமெரிக்கா
Updated on
1 min read

அணு ஆயுதப் பரவல் தடுப்பு, அணுசக்தியை சமூக பயன்பாட்டில் ஈடுபடுத்துவது தொடர்பான அணு எரிப்பொருள் வழங்கும் நாடுகள் (நியூக்ளியர் சப்ளையர்ஸ் குரூப்) நாடுகளில் இந்தியாவை உறுப்பினராக அங்கீகரிக்க பாகிஸ்தான் தெரிவித்து வந்த எதிர்ப்பை அமெரிக்கா புறக்கணித்துள்ளது.

“இது அணு ஆயுதப் போட்டியைப் பற்றியதோ, அணு ஆயுதங்கள் பற்றியதோ அல்ல, மாறாக அமைதிக்கான வழிமுறையில் அணு ஆற்றலை சமூகப் பயன்பாட்டுக்கு முறைப்படுத்துவது தொடர்பான விஷயம், எனவே பாகிஸ்தான் இதனை புரிந்து கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அமெரிக்க அரசுத்துறையின் உதவி செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதாவது, என்.எஸ்.ஜி. உறுப்பினர் தகுதிக்காக இந்தியா விண்ணப்பித்திருப்பது, இதனை பாகிஸ்தான் எதிர்ப்பது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் மார்க் டோனர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆனாலும் 48 நாடுகள் கொண்ட என்.எஸ்.ஜி. முக்கியக் கூட்டம் நடைபெறும் நிலையில் இந்திய கோரிக்கை நிறைவேறுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

மேலும் டோனர் கூறும்போது, “2015-ம் ஆண்டு அதிபர் ஒபாமா இந்தியா சென்றிருந்த போது, ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டில் இந்தியா தேவைகளைப் பூர்த்தி செய்திருப்பதால் என்.எஸ்.ஜி. உறுப்பினருக்கு தயாராக இருக்கிறது என்பதை உறுதி செய்தார், இந்த அடிப்படையில்தான் நான் கூறுகிறேன், ஆனால் 48 நாடுகள் கொண்ட என்.எஸ்.ஜி. யில் உறுப்பினராக பிற நாடுகளின் சம்மதம் தேவை எனவே வாக்கு எப்படிப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மேலும் புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதென்பது என்.எஸ்.ஜி.யின் உள்ளார்ந்த விவகாரம், எனவே அவர்கள் அடிக்கடி சந்தித்து பேசுகின்றனர் என்பதைத் தவிர நான் வேறு எதுவும் கூறுவதற்கில்லை. இன்னொரு விஷயம் என்னவெனில் வரவிருக்கும் என்.எஸ்.ஜி. கூட்டம் இது தொடர்பானதல்ல.

எந்த ஒரு நாடும் என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராகக் கோரி விண்ணப்பம் செய்யலாம் ஆனால் மற்ற உறுப்பினர்கள் அதனை ஏற்க வேண்டும் என்பதே விதி” இவ்வாறு கூறினார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in