தனிநபர் சார்ந்த மனித உரிமை மீறல்களுக்கு இஸ்லாமிய நாடுகளின் குரல்கள் எங்கே?

தனிநபர் சார்ந்த மனித உரிமை மீறல்களுக்கு இஸ்லாமிய நாடுகளின் குரல்கள் எங்கே?
Updated on
2 min read

இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காரணத்தால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வாரம் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. மேலும் பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட பல அரபு நாடுகள் இவ்விவகாரத்தில் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்ததோடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லியிருந்தன.

இந்தப் பின்புலத்தில், சாண் டியாகோ மாகாண பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் அகமது டி.குரு ‘தி கான்வர்சேஷன்’ தளத்தில் எழுதிய கட்டுரை ஒன்று முக்கியத்துவம் பெறுகிறது. அந்தக் கட்டுரையின் முக்கிய அம்சங்கள் அப்படியே இங்கு...

‘2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றது முதலே இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும், நடவடிக்கைகளும் நாட்டில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டுகளில் காவல் துறையின் அலட்சியம் உள்ளிட்ட காரணங்களால் இந்து கும்பல்களால் இஸ்லாமியர்கள் மீது பல கொலைகள் அரங்கேற்றியதற்காக மோடி தலைமையிலான அரசாங்கம் மீது விமர்சனம் எழுந்தது.

முன்னதாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக குடியுரிமைச் சட்டத்தை பாஜக அரசு 2019-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த பாரபட்ச கொள்கைகள் உலக அளவில் கவனம் பெறுகின்றன. ஏனெனில் உலக அளவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இந்தோனேசியாவும், இரண்டாம் இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. இந்திய மக்கள் தொகையில் 15% இஸ்லாமியர்கள் உள்ளனர்.

ஓர் இஸ்லாமியராக, முகமது நபியின் மீதுள்ள ஆழ்ந்த மரியாதையை நான் நன்கு அறிவேன், மேலும் தனிநபர்களின் வெறுப்பையும் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். எனினும் இவ்விவகாரத்தில் இஸ்லாமிய அரசாங்கங்களின் எதிர்வினை என்பது அவர்களின் அரசியல் ஆட்சிகளைப் பிரதிபலிக்கிறது. எனது புத்தகமான “Islam, Authoritarianism and Underdevelopment”-ல் நான் கூறியிருப்பது போல பெரும்பாலான இஸ்லாமிய அரசாங்கங்கள் சர்வாதிகாரமாக செயல்படுகின்றன. வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதைவிட இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகளைக் கண்டிப்பதில்தான் அவை கவனம் செலுத்துகின்றன.

ஆயிஷா - சக்தி வாய்ந்த பெண்: முகமது நபிகள் ஆயிஷாவை திருமணம் செய்துகொள்ளும்போது ஆயிஷாவின் வயது தொடர்பாக பேசப்பட்டதுதான் இந்தியாவில் பிரச்சினையாகி உள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான, வீரியம் மிக்க மற்றும் சக்தி வாய்ந்த நபர்களில் ஆயிஷாவும் ஒருவர். அவர் ஹதீஸின் முன்னணி அறிவிப்பாளராக இருந்தவர்.

ஹதீஸில் கூறியுள்ளதுபடி, திருமணம் செய்து கொண்டபோது ஆயிஷாவின் வயது 9. இதனை பல இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். நவீன காலத்திற்கு முந்தைய திருமணமாகவே சிலர் இதனைப் பார்க்கின்றனர். ஆனால், சிலர் திருமணத்தின்போது ஆயிஷாவுக்குப் 18 அல்லது 19 வயது இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.

திருமணத்தின்போது ஆயிஷாவின் வயதை அறிவது என்பது முடியாத ஒன்று. அதாவது இஸ்லாமிய அறிஞர் கலீத் அபு எல் ஃபட்ல் வலியுறுத்தியது போல், "எங்களுக்குத் தெரியாது, ஒருபோதும் தெரியாது” - இதனை இவ்வாறுதான் பார்க்க வேண்டும்.

அவதூறுகளுக்கு முக்கியத்துவம்... மனித உரிமைகளை புறக்கணித்தல்... முகமது நபிகளுக்கு எதிரான கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்வினையாற்றுவது இது முதல் முறை அல்ல. 1989-ஆம் ஆண்டு ஈரான் மூத்த மத தலைவர் கொமேனி, நாவல் ஆசிரியரான சல்மான் ரூஷ்டியை கொல்வதற்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்தார். இஸ்லாம் குறித்த கார்ட்டூன் வரைந்தற்காக டென்மார்க் நிறுவன பொருட்கள் மத்திய கிழக்கு முழுவதும் தடைச் செய்யப்பட்டன.

இதிலிருந்து இஸ்லாமிய நாடுகளின் முன்னுரிமையை நாம் அறிந்து கொள்ளலாம். அவை இஸ்லாமிய மதம் சார்ந்த அவதூறுகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள். தனிப்பட்ட முஸ்லிம் சார்ந்த மனித உரிமை மீறல்களை இஸ்லாமிய நாடுகள் கவனத்தில் கொள்ளவில்லை.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தங்கள் உரிமைகள் நசுக்கப்படுவதாக புகார் அளித்துள்ளனர். ஆனால், இதற்கெல்லாம் இஸ்லாமிய நாடுகள் எதிர்வினை காட்டவில்லை.

அடுத்த எடுத்துக்காட்டு சீனா. அந்த நாட்டில் உய்குர் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இதற்கெல்லாம் இஸ்லாமிய நாடுகள் எந்த எதிர்வினையும் காட்டியது இல்லை.

மற்றொரு பக்கம் இஸ்லாமிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் மீது மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. உதாரணத்துக்கு, பாகிஸ்தானில் அகமதியா, ஷியா, இந்துக்கள் மீது வன்முறை நடத்தப்படுகிறது. ஈரானில் பலுசிஸ், குர்து ஆகிய சிறுபான்மையினர்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது.

வெளிநாடுகளில் உரிமை சார்ந்து பேசும் அதேநேரத்தில் உள்நாட்டில் இஸ்லாமிய நாடுகளின் நடவடிக்கைகள் முரணாக உள்ளது. இஸ்லாமிய நாடுகளின் இந்த எதிர்வினைகள் பிற நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்களுக்கு நிச்சயம் உதவாது. உண்மையில் அவர்களுக்கு நிலையான மற்றும் கொள்கை ரீதியான ஆதரவே தேவைப்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in