Published : 10 Jun 2022 01:43 PM
Last Updated : 10 Jun 2022 01:43 PM

அமேசான் காடுகள் அழிப்பைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல்பாடு: அமெரிக்கா - பிரேசில் ஒப்புதல்

வாஷிங்டன்: அமேசான் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதில் ஒன்றிணைந்து செயல்பட அமெரிக்கா - பிரேசில் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில், “லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த அமெரிக்க உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபரி ஜோ பைடனும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவும் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின்போது, அமேசான் காடுகளை மேலும் அழிக்கப்படுவதைத் தடுப்பதில் ஒன்றிணைந்து செயல்பட இரு அதிபர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும், உக்ரைன் போர் குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் ஆலோசித்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில், பொலிவியா, பெரு, ஈகுவேடார், கொலம்பியா, வெனிசுவேலா, கயானா, சுரினாம், பிரெஞ்ச் கயானா ஆகிய 9 நாடுகளில் அமேசான் காடு பரந்து விரிந்துள்ளது.

40 ஆயிரம் செடி வகைகள், 1,300 பறவை வகைகள், 2,200 மீன் வகைகள், 427 வகை பாலூட்டிகள் அமேசான் காட்டில் உள்ளன. சுமார் 500 வகையான பழங்குடியினர் இக்காட்டில் வசிக்கின்றனர்.

சமீப காலமாகவே சுரங்க நடவடிக்கைகள், காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் 20 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு விநாடியிலும் 1.5 ஏக்கர் அளவிலான அமேசான் காடு அழிக்கப்பட்டு வருவதாக ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

ஜெய்ர் போல்சோனாரோ மீது எழும் குற்றச்சாட்டு: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலின் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக ஜெய்ர் போல்சோனரோ உலக அளவில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

பிரேசில் அரசை எதிர்த்து அந்நாட்டு பழங்குடி மக்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x